முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமான  அனைத்து குற்றவாளிளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் அதிரடியாக பேசினார்.

ஜெயலலிதாவின்  மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ் அணி சார்பில் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தைப் பார்த்து சசிகலா தரப்பினர் புலம்பித் தீர்ப்பதாக கூறினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த விடாமல் செய்யும் வகையில் அமைச்சர்கள் சிலர்,  தொடர்ந்து தொண்டர்களை தடுத்ததாக குற்றம் சாட்டினார்.

அந்த சதியை முறியடித்து போராட்டம் வெய்யிகரமாக நடைபெற்றதாக நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஓபிஎஸ் அணியல்ல என்றும் ஜெயலலிதா அணி என தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளதாக கூறிய நத்தம் விஸ்வநாதன், ஜெலலிதா  மரணம் குறித்து விசாரணை தொடங்கும் என்றும் குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவர். என்றும் கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவின் பதவிக்கு ஆபத்து வரும், அதன் மூலம் தாங்களும்  பாதிக்கப்படுவோம்  என்ற பீதியிலும் பயத்திலும் அமைச்சர்கள் செங்கோட்டையனும், ஜெயக்குமாரும் புலம்பி வருவதாக தெரிவித்தார்.

சசிகலா தரப்பில் உள்ள எம்எல்ஏக்களும், எம்பிக்களும் விரைவில் ஓபிஎஸ் க்கு ஆதரவு அளிப்பார்கள் என விஸ்வநாதன் கூறினார்.