natarajan will be arrested soon

சசிகலா புஷ்பாவை ஆயுதமாக பயன்படுத்தி, சசிகலாவின் கணவர் நடராஜனை கைது செய்யும் நடவடிக்கையில், பாஜக தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சசிகலா குடும்பத்தை சேர்ந்த யாரும், அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்துவது, பிரதமர் மோடிக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

ஜெயலலிதா இறந்த சில தினங்களிலேயே, இது குடும்ப ஆட்சிதான், ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனைப்படிதான் அனைத்தும் நடக்கிறது என்று பேட்டி எல்லாம் கொடுத்தார் நடராசன்.

காங்கிரசின் பின்னணியில் இருந்துதான் நடராசன் இயங்குகிறார் என்று பாஜக நினைக்கிறது. மேலும், சசிகலாவும், தினகரனும் சிறையில் உள்ள நிலையில், அதிமுகவை, நடராஜனே பின்னால் இருந்து இயக்குகிறார் என்றும் டெல்லி மேலிடத்திற்கு சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.

எனவே, அவரை வசமாக சிக்க வைத்து சிறையில் தள்ளும் முயற்சியில் இருந்த பாஜகவுக்கு, சசிகலா குடும்பத்தை தொடர்ந்து எதிர்த்து வரும், சசிகலா புஷ்பா சரியான ஆயுதமாக தெரிகிறார்.

அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போது, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் கடுமையாக தாக்கப்பட்டது முதல், சசிகலா புஷ்பாவின் எதிர்ப்பு மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

மேலும், சுவரொட்டிகளில் தம்மை அவதூறாக சித்தரித்த விவகாரத்தில், கோகுல இந்திரா, ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை உள்ளிட்ட 15 பேரின் மீது டெல்லி போலீசில், சசிகலா புஷ்பா புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, பின்னணியில் இருந்து அவர்களை தூண்டி விட்டதுடன், அந்த சுவரொட்டிகளை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டவர் சசிகலாவின் கணவர் நடராஜனே என்றும், அவரை சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் டெல்லி போலீசில் மற்றொரு புகாரை கொடுக்க சசிகலா புஷ்பா முடிவு செய்துள்ளார். 

அத்துடன் நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் சசிகலா புஷ்பா குறித்து அவதூறாக வெளிவந்த கட்டுரைகள், சசிகலா குடும்பத்தின் பேரிலேயே வெளியிடப்பட்டதாகவும் அவர் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகார்களின் அடிப்படையில், சசிகலா கணவர் நடராஜனை கைது செய்ய வேண்டும் என்றும், பாஜக மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா. ஏற்கனவே, சசிகலா குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருக்கும் டெல்லி, சசிகலா புஷ்பாவை கெட்டியாக பிடித்து கொள்ள முடிவு செய்துள்ளது.

எனவே, சசிகலா கணவர் நடராசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.