முதலமைச்சர்  ஜெயலலிதா  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  22 ஆம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றும் பலனின்றி, கடந்த டிசம்பர் , 5ம் தேதி  மரணமடைந்தார்.
அதன் பிறகு அதிமுகவில் நடந்த குழப்பங்களால் கட்சி ௩ அணிகளாக பிரிந்தது. 

ஜெயலலிதா மறைவால் தமிழத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை என்று புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேருவுக்கு பிறகு அரசியலில் பெரிய வெற்றிடம் வரும் என்று கூறினார்கள். ஆனால் லால் பகதூர் சாஸ்திரி என்ற தலைவர் வந்தார். அதே போல் இந்திரா காந்திக்கு பிறகு யாரும் இல்லை என்றும் பேசப்பட்டது. ராஜீவ் காந்தி வந்து ஆட்சி செய்தார். 

அதேபோல், தமிழகத்திலும் காமராஜருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, எம்.ஜி.ஆர்-க்கு பிறகு வெற்றிடம் ஏற்படும் என்று பேசினார்கள். அடுத்தடுத்த தலைவர்கள் வந்து கொண்டே தான் இருந்தார்கள். புதிய தலைவர்கள் இனி பிறக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள். அது மக்களுக்கு தெரியும்” என்றார்.