எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், கடின உழைப்புக்கும் பெயர் எடுத்த, ‘குஜராத் கழுதை’களைப் பார்த்து ஏன் முதல்வர் அகிலேஷ் யாதவ் அஞ்சுகிறார்? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரசாரம்
கடந்த 3 நாட்களுக்கு முன் ரேபரேலி நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் குஜராத் கழுதைகளுக்காக ஏன் பிரசாரம் செய்கிறீர்கள் என்று அமிதாப்புக்கு அகிலேஷ் கேள்வி எழுப்பி, பிரதமர் மோடியை மறைமுகமாக கழுதை என்று தாக்கி இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து பிரதமர் மோடி நேற்று பேசினார்.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. 4 கட்டவாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், 5-ம் கட்டத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாரைச் நகரில் நேற்று நடந்த ‘விஜய் சாங்நாத்’ பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-
அச்சமா
அகிலேஷ் நீங்கள் மோடியையோ அல்லது பாரதிய ஜனதா கட்சியையோ தாக்கி பேசியிருந்தால் நான் புரிந்து கொண்டு இருப்பேன். ஆனால், நீங்கள் கழுதையை தாக்கி பேசி இருக்கிறீர்கள். உங்களுக்கு கழுதையைப் பார்த்து அச்சமா?. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் தானே குஜராத் கழுதைகளை விட்டு ஒதுங்கி இருக்கிறீர்கள்?
கழுதைபோலதான்
நாட்டு மக்கள் தான் எனக்கு எஜமானர்கள். நான் கழுதையிடம் இருந்து விசுவாசத்தையும், கடின உழைப்பையும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், கழுதை இரவுபகல் பாராமல் உழைத்தாலும், விசுவாசத்தோடு எஜமானர்களுக்கு இருக்கிறது. அதேபோலத்தான் நானும் இருக்கிறேன்.
அறியவில்லை
உங்களின் சாதிய மனப்பான்மை, மிருகங்கள் மீது திரும்பி இருக்கிறதை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது. இதுதான் உங்கள் அரசின் அடையாளம். ஆனால், உங்களுக்கு கழுதையின் மூலம் கிடைக்கும் நல்ல குணங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லை.
உங்களின் மனதும், புத்தியும் தெளிவாக இருந்தால், நீங்கள் கழுதையிடம் இருந்து நல்ல குணங்களை பெற்று இருப்பீர்கள். கழுதை எஜமானருக்கும் விசுவாசமாக இருக்கும், எஜமானர் எந்த அளவுக்கும் வேலை வாங்கலாம். கழுதையால் பராமரிப்பு செலவு குறைவு.
ஓயாது
பசி எடுத்தாலும், சோர்வடைந்தாலும் கழுதை பணியை முடித்து விட்டுதான் ஓயும். 125 கோடி மக்கள்தான் எனது எஜமானர்கள், புரிந்துகொள்ளுங்கள் அகிலேஷ். அவர்கள் என்னை என்ன வேலை செய்யப் பணித்தார்களோ அதைச் செய்கிறேன்.
அது சர்க்கரை மூடையோ அல்லது சுண்ணாம்பு மூடையோ தனது முதுகில் எவ்வளவு சுமை ஏற்றினாலும், கழுதை பாகுபாடு பார்க்காது.
பொருந்தாது
அகிலேஷ், நீங்கள் குஜராத் கழுதைகளை வெறுக்கலாம். ஆனால், அந்த மாநிலத்தில் தான் தயானந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, கடவுள் கிருஷ்ணர் பிறந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோன்ற வெறுப்பு உங்களுக்கு பொருத்தமாகாது.
சந்தர்பவாத கூட்டணி
அகிலேஷ் யாதவுக்கு மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலையில்லை. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளார். உத்தரப் பிரதேச மக்கள் உங்களின் சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
‘குஜராத் கழுதை’களைப் பார்த்து அகிலேஷ் ஏன் அஞ்சுகிறார்? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
Latest Videos
