பஞ்சாப் பாணியில் புதுச்சேரியில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் வில்சன் 82 மணி நேர மீட்புப் போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். தமிழகத்தையே சோகத்தில் இந்த நிகழ்வு  தள்ளியது. குழந்தை சுர்ஜித்தின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆழ்துளை கிணறுகளை மூடுவது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில், “குழந்தை சுர்ஜித்தின் மறைவு, நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து இரண்டு பாடங்களை நாம் கற்றுள்ளோம். முதலில் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடித்து உடனடியாக மூட வேண்டும். அடுத்து, ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் தொழில்நுட்பத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். 
புதுச்சேரியில் பயனற்ற இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளேன். உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருக்கும் நில உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். மேலும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும்” என்று நாராயணசாமி தெரிவித்தார்.


பஞ்சாபில் ‘தாண்ட்டிரஸ்ட் பஞ்சாப் மிஷன்’ என்ற பெயரில் ஆழ்துளைக் கிணறுகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கும் திட்டமும் பஞ்சாபில் உள்ளது குறிப்பிடத்தக்கது.