அதிரடி ரங்கா! அல்டாப்பு நாராயணா ...புதுச்சேரியின் லேட்டஸ்ட் டிரெண்டிங் கைஸ் இவர்கள்தான். 
யார்ரா இது? கேடி பில்லா, கில்லாடி ரங்கா தெரியும் . ஆனா  இவங்க யாரு என்று மண்டை காய்பவர்களுக்காக உடைக்குறோம் பாஸ் உண்மையை. யெஸ்! புதுவையின் முன்னாள் முதல்வர்தான் அதிரடி ரங்கா, இந்நாள் முதல்வர்தான் அல்டாப்பு நாராயணா. 

நிற்க.

பேய்த்தனமான டிஸைன்களில் பிளக்ஸ் வைத்து, பார்க்கிறவனை கொலையா கொல்ற பழக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டந்தேன்.

விநாயகர் சதுர்த்தி, புதுப்பட ரிலீஸ், கம்பெனி ஓப்பனிங் என்று எதுவும் வந்துட கூடாது. பயலுவ பொங்கி எழுந்துருவாய்ங்க. பனைமர உசரத்துக்கு ஆல மர அகலத்துக்கு ஆன, பூன, குதிர, தேரு, தென்னமரம்ன்னு கையில கிடைக்கிற வஸ்துக்களையெல்லாம் எடுத்துப்போட்டு கிராஃபிக்ஸ் டிஸைனர் கிண்டி கொடுக்கிற படுபயங்கர பிளக்ஸ் பாதாம் கீரை ரோட்டில் கட்டிவிட்டு ஒரு லுக் விடுவாய்ங்க பாருங்க...தெப்பக்குளத்துல இருந்து அழகர் கோவில் வரைக்கும் அல்லு தெறிக்கும். 

இந்த பிளக்ஸ் மேனியா மதுரக்காரய்ங்கட்ட இருந்து அப்டியே தீயா பரவி புதுச்சேரி வரைக்கும் போட்டு எறியுது. 
நம்மூர்லயாச்சும் பயபுள்ளைக அதுங்க படத்தை போட்டுத்தான் அலப்பரைய கூட்டுவாய்ங்க. ஆனா பாண்டிச்சேரியில முதல்வர்கள் படத்தப்போட்டு முழி பிதுங்க வெக்கிறாய்ங்க.

காங்கிரஸ் கோஷ்டி நாராயணசாமியின் படத்தை போட்டு ஒரு டெரர் பிளக்ஸை வைத்தால் , அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ரங்கசாமியின் கோஷ்டி ரகளையாக இன்னொரு பிளக்ஸை கட்டுகிறது. 

இந்த ரெண்டு டீமும் ரவுண்டு கட்டி பண்ணும் ரவுசில் தாறுமாறாக தலைசுற்றி தவிப்பது அப்பாவி பொதுஜனம்தான். பாண்டிச்சேரியில் இன்னமும் அரைக்கால் டிரவுசரும், கையே இல்லாத பனியனும் போட்டுக்கிட்டு சைக்கிள்ள ஊர் சுத்துற பிரெஞ்சுக்காரங்க நிறைய பேர் இருக்கிறாங்க.

அதுங்க எல்லாம் இந்த பிளக்ஸ் போர்க்களத்தை பார்த்துவிட்டு ‘ஓ மை காட்! இஸ் திஸ் சீஃப் மினிஸ்டர் மிஸ்டர் நாராய்ண்ஸ்வமீ! அண்டு தட் இஸ் மிஸ்டர் ரங்ஸ்வமீ. வா ஹேப்பண்ட் டுதெம்?’ என்று அலறுவது நோணாங்குப்பம் , கோரக்குப்பம், சொறியாங்குப்பம் தாண்டி வேதாரண்யம் வரைக்கும் வெறித்தனமாய் கேட்கிறது. 

பாகுபலி பிரபாஸின் தலையை வெட்டி அய்யங்குப்பம் பக்கமாய் எறிந்துவிட்டு அந்த இடத்தில் நாராயண சாமியின் தலையை மாட்டிவிட்டு ‘விஸ்வரூபனே’ என்று ஒரு ஸ்டில்லை தட்டியிருக்கிறார்கள் பாருங்கள். ராஜமெளலி மட்டும் இதைப்பார்த்தால் ரத்தவாந்தி எடுத்துடுவார். 

தங்கல் ஆமீர்கானின் தடதட உடம்போடு முதல்வர் ரங்கசாமியின் தலையை ஒட்டிவிட்டு ‘எங்கள் தலைவனே’ என்று ஒரு காட்டு காட்டியிருக்கிறார்கள். முதல்வரின் கான்வாய் கிராஸ் ஆகும் இடத்தில் இருக்கும் இதைப்பார்த்து டிரைவர்களுக்கு ஹார்ட் பீட்டின் கியர் டாப்புக்கு எகிறுகிறது.

அரச உடையில்  கையில் கோடரியை தூக்கியபடி ராஜநடை போடும் நாராயணசாமியின் ரகளையான ஸ்டில்லுக்கு முன்னாடி நம்ம தெலுங்கு தேசத்து மோகன்பாபு, பவன்கல்யாண், ராம்சரணெல்லாம் தூசுலு. சிரஞ்சீவியே ‘தேவுடா’ என்று வெறித்து தெறிக்குமளவுக்கு அட்ராசிட்டியான லுக் அது.

கிராஃபிக்ஸில் ஸ்பீல் பெர்க்கையே பிச்சையெடுக்க வைக்கும் பாண்டிச்சேரி களேபரத்தில் ஒரு ஆச்சரியமும் உண்டு. கிரியேடிவிட்டி விஷயத்தில் நாராயணசாமி டீமை விட ரங்கசாமியின் டீம் சில படிகள் முன்னேதான் நிற்கிறது. ரங்கசாமியின் தலையை பிரபாஸ், ராணா, சத்தியராஜ் உடம்புகளோடு ஜஸ்ட் ஒட்டிவிடாமல் சில ஜில்ஜாக்கு வேலைகளையும் செய்கிறார்கள்.

குறிப்பாக நாராயணசாமியின் மீசை எடுத்துவிட்டு, செமத்தியாக முடியை டைட் ட்ரிம் அடித்து ஏற்றி ஒரு கார்ப்பரேட் லுக் கொடுத்து செருகிவிடுகிறார்கள். ’ஓவ் வாட் எ லவ்லி மேன்’ என்று பாண்டிச்சேரிக்கு டூர் வரும் ஃபாரீன் பிகருங்களெல்லாம் மெர்சலாகுதுங்கோ இதைப் பார்த்து. 

ஆக நீங்களும் பாண்டிச்சேரிக்கு டூர் போனாக்க, ஆரோவில் போறீங்களோ இல்லையோ இந்த அதகளதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க. 
ஆனா எனக்கு ஒரேயொரு டவுட்டு...
திகாரையே திணறவிட்ட கிரண்பேடி மேடம் இதையெல்லாம் பார்த்துட்டு எப்படித்தான் இன்னமும் அங்கேயிருக்காங்களோ!