Narayanasamy vs kiran bedi

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு பரிகாரம் வேண்டி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மதுரை மாவட்டம், சிலார்பட்டி நேரக்கோவிலில், நள்ளிரவு பூஜை நடத்தினார்.

புதுச்சேரியில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ் கட்சியின் ., ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை நிலை கவர்னர் கிரண்பேடியின் நிர்வாக தலையீட்டால், இருவருக்கும் பனிப்போர் நீடிக்கிறது.


கவர்னரை மாற்ற மத்திய அரசு சம்மதிக்காது என்பதால், கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் சக்தி கொண்ட, ஸ்ரீ காலதேவியிடம் முறையிட, நாராயணசாமி முடிவு செய்தார். அதன்படி மதுரை வந்த அவர், பேரையூர் அருகே உள்ள சிலார்பட்டி நேரக்கோவிலுக்கு சென்றார். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை பூஜை சிறப்பு வாய்ந்தது.

நள்ளிரவு, 12:00 மணிக்கு அமாவாசை துவங்கியதால், அதிகாலை, 1:45 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பரிவட்டம் கட்டி, மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலை, 11 முறை வலமிருந்து இடமும், 22 முறை, இடமிருந்து வலமும் சுற்றி வந்தார்.

பின், அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, பூசாரி சாமிநாதனிடம், பரிகாரம் சம்பந்தமாக ஆலோசித்தார். பூஜைகள் முடிந்து, அதிகாலை, 2:45 மணிக்கு புறப்பட்டார். 

புதுச்சேரியில், ஆளுனர் கிரண் பேடி தலையீட்டால், நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதற்கு பரிகாரம் செய்யவே நாராயணசாமி பூஜை செய்ய வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

ஒருவருக்கு நல்ல நேரம் இருந்தால் மட்டுமே, கடவுள் கொடுப்பது கிடைக்கும் என்பது இக்கோவிலின் தத்துவம். கெட்ட நேரத்தை போக்கும் சக்தி, இங்குள்ள ஸ்ரீகாலதேவிக்கு உண்டு என கூறப்படுகிறது. . மேலும் கோவிலுக்கு வந்தால், எல்லாம் நல்லபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.சூரிய அஸ்தமனத்திற்கு பின் கோவில் நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன், சாத்தப்படுகிறது..