உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராசில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்று முதல்வர் நாராயணசாமி பேசினார்.
“உத்தரபிரதேசத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், உ.பி. அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் சென்றார்கள். அப்போது அவர்களை அந்த மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கீழே பிடித்து தள்ளினார்கள். இருவரையும் கைது செய்தனர். இரு நாட்கள் கழித்து ராகுல் காந்தி மீண்டும் அங்கே சென்று பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த தைரியம் யாருக்காவது வருமா? பாஜகவினருக்கு வருமா? 
 நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி காங்கிரஸ். இந்த கட்சிக்குதான் அடித்தட்டு மக்களின் கஷ்ட, நஷ்டமெல்லாம் தெரியும். மத்தியில் உள்ள பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே கிடையாது. எதற்கெடுத்தாலும் வருமான வரித்துறையினரை ஏவி மிரட்டுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற செயல்களை எல்லாம் முறியடிக்க காங்கிரஸ் கட்சியால்தான் முடியும்.

 
புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால், அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு ஒருவரை அனுப்பி வைத்துள்ளது. மாநிலத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் கவர்னர் செய்கிறார். அவருடைய குறுக்கீட்டை முறியடித்து கடந்த நான்கரை ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர், விதவைகள் உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
இன்னும் 6 மாத காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் மதவாத சக்திகளை நாம் முறியடிக்க முடியும். புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை முறியடிக்க வேண்டுமென்றால், பாஜகவை புதுச்சேரியை விட்டு விரட்ட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.” என்று நாராயணசாமி தெரிவித்தார்.