தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.    

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது.  விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானர். இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23-ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன. நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, திமுக கொடுக்குமா? அல்லது தானே போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.