அமமுக காலப்போக்கில் கல்லறைக்கு போய்விடும் என்று நாஞ்சில் சம்பத் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.


தினகரன் பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியான பிறகு, அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச்செல்வன் விலக்கப்படுவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதனையடுத்து, டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்த தங்கதமிழ்ச்செல்வன், அரசியலில் அமைதியாக இருக்கப்போவதாக அறிவித்தார். இதற்கிடையே அவர் அதிமுகவில் சேர முயற்சித்துவருவதாகக் கூறப்பட்டது. திடீர் நிகழ்வாக தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போவதாக நேற்று மாலை தகவல் வெளியானது.


அதன்படி இன்று அண்ணா அறிவாலயம் வந்த தங்கதமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தங்கதமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை அமமுகவினர் விமர்சித்துவரும்நிலையில், அமமுகவிலிருந்து விலகி தற்போது திமுக மேடைகளில் பேசிவரும் நாஞ்சில் சம்பத், வரவேற்ள்ளார்.

 
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், “அமமுகவில் யாரும் இருக்க முடியாது. அங்க இருக்கும் சிலரும் வெளியேறிவிடுவார்கள். அக்கட்சி பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நின்று, சரிந்துகொண்டிருக்கிறது. அமமுகவின் அழிவை யார் நினைத்தாலும் இனி தடுக்க முடியாது. ஒரு கொள்கை சார்ந்த கட்சியாக  அதை உருவாக்க தலைமை பொறுப்பில் இருப்பவர் இதுவரையிலும் சிந்திக்கவில்லை. தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும் தோல்விக்கான காரணத்தை அவர் யோசிக்கவில்லை. டிடிவி தினகரனால் அமமுகவை நடத்த முடியாது. காலப்போக்கில் அக்கட்சி கல்லறைக்கு போய்விடும்.” என்று தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், “ நானும் தற்போது திமுகவில்தான் இருக்கிறேன். இன்றுகூட கட்சிக் கூட்டத்தில் பேச இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.