டி.டி.வி.தினகரன், பாஜகவை எதிர்த்து பேசியதை நான் பார்த்ததே இல்லை என்றும், தினகரனிடம் திராவிட சிந்தனை இல்லை என்றும் அவரிடம் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் தலைவியாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தன்னை, சசிகலா அணியுடன் இணைத்துக் கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதன் பிறகு, நாஞ்சில் சம்பத் தீவிர தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் துவக்கினார். கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். அந்த கொடி, அதிமுக கொடி போன்றே இருந்தாலும், நடுவில் ஜெயலலிதாவின் படம் வைத்து கொடியை அறிமுகம் செய்தார். 

இந்த நிலையில்தான், நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் இருந்து வெளியேறினார். அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். தான் இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும், இலக்கிய மேடைகளில் மட்டுமே தன்னைப் பார்க்கலாம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.

பிரபல வார இதழ் ஒன்றுக்கு நாஞ்சில் சம்பத் பேட்டி அளித்திருந்தார். அதில், தினகரனிடம் திராவிட சிந்தனை இல்லை என்று அதிரடியாக கூறினார். திராவிடம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜக, சங் பரிவாரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அதை தினகரன் நடைமுறைப்படுத்தயுள்ளார். இதில் எழுந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது அவரின் கடமை. மேலோட்டமாக பார்த்தால் அவர் பாஜகவை எதிர்ப்பது போல தோன்றும். ஆனால், பாஜகவை தீவிரமாகவும், தீர்க்காகவும் எதிர்த்து தினகரன் பேசி நான் பார்த்ததே இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.