போன மச்சான் திரும்பி வந்தான்! என்ற நக்கல் இடியம்-க்கு நச்சுன்னு பொருந்துகிறார் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோவின் நிழலாக அரசியல் ராஜாங்கம் செய்து வந்தவர் சுமார் ஏழு வருடங்களுக்கு முன் அவரிடம் கருத்து முரண்பாடு கொண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியில் பெரும் செல்வாக்குடன், நிறைய சம்பாத்தியத்துடன் வலம் வந்தவர், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் தினகரனிடம் தஞ்சமடைந்தார். 

ஓ.பன்னீர்செல்வத்தை தன் வாழ்நாள் விரோதியாக, மிக மிக வன்மமான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவக்கியதும் ‘இதில் திராவிடம் இல்லை. திராவிடம் இல்லாத கட்சியில் நான் இருக்க மாட்டேன்.’ என்று ஒரு சாக்கு சொல்லி வெளியேறினார். ‘நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, இலக்கிய பணிகளை செய்யப்போகிறேன். இனி என்னை  இலக்கிய மேடைகளில் காண்பீர்கள்.’ என்றவர் அப்படியே சைடில், ஆர்.ஜே.பாலாஜியின் ஜோடியாக எல்.கே.ஜி. எனும் படத்தில் நடித்தார். 

ஆனால் எங்குமே பெரிதாய் பப்பு வேகாத நிலையில் இப்போது மீண்டும் அரசியலுக்கு அடிபோட்டுள்ளார். ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பிற்கு வைகோதான் காரணம்! என்பதை சொல்லிக்காட்டி ‘பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிய முதல் தலைவர் வைகோ!’ என்று சொல்லி மீண்டும் ம.தி.மு.க.வில் இணைவதற்காக அடிபோட்டிருக்கிறார். வைகோவும் ஏற்றுக் கொண்டுவிட்டால் சில மாதங்களுக்கு முன்பு வரை தான் கழுவிக் கழுவி ஊற்றிய தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வண்டிக்கான ம.தி.மு.க. சக்கரமாக தமிழக வீதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறார். 

இந்த நாஞ்சில் சம்பத், இப்போது ரஜினியை பற்றி தந்திருக்கும் விமர்சனம் என்ன தெரியுமா?....”நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்லியிருக்கிறார் அவர். முதுகெழும்பு இல்லாத கோழையின் பெயர் ரஜினிகாந்த். முரண்பாட்டின் மொத்த உருவத்தின் பெயர் ரஜினி. தானும் குழம்பி, தமிழக மக்களையும் குழப்பலாம் என எதிர்பார்க்கிறார். அவரது அரசியல் இனி தமிழகத்தில் எக்காலத்திலும் எடுபடாது.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார்.  

சம்பத்தின் இந்த மூர்க்கத்தனமான விமர்சனமானது ரஜினி தரப்பை வெகுவாய் காயப்படுத்தியுள்ளது. ‘அரசியலை விட்டு விலகியவரால் வசூல், சம்பாத்தியம் என்று இலக்கிய மேடையில் பிழைக்க முடியவில்லை. இதனால் மீண்டும் அரசியலுக்குள் நுழைய எத்தனிக்கிறார். தன் வருகையை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இப்படி ரஜினியை வம்புக்கிழுத்திருக்கிறார். ரஜினியை பற்றி பேசினால் உலகமே திரும்பிப் பார்க்கும் எனும் நப்பாசையில் இப்படி நடந்திருக்கிறார் நாகரிகம் கெட்ட நாஞ்சில் சம்பத்.’ என்று கொதித்திருக்கிறார்கள். எந்தா நாஞ்சில் இங்ஙனம்!?