நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாஞ்சில் சம்பத் திமுகவில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுக பிளவுக்கு பிறகு தினகரன் அணியில் இருந்த நாஞ்சில் சம்பத், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அணியிலிருந்து வெளியேறினார். இதன்பிறகு இலக்கிய மேடைகளில் மட்டும் தலைகாட்டிவரும் நாஞ்சில் சம்பத், அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கவும் தவறுவதில்லை. இடையே மீண்டும் மதிமுகவுக்கு செல்லப்போகிறார் என செய்திகள் பரவின. ஆனால், அதை மறுத்த நாஞ்சில் சம்பத், தொடர்ந்து அரசியல் கட்சிகளிடமிருந்து விலகியே இருந்துவந்தார்.

தமிழகச் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திமுக மீதான பாசம் நாஞ்சில் சம்பத்துக்கு அதிகரித்துள்ளது. தாய்க் கழகமான திமுக மீதான பாசத்தையும் வெளிப்படுத்தி வருகிறார் நாஞ்சில் சம்பத். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் எனக் கூறிவரும் நாஞ்சில் சம்பத், நாடாளுமன்றத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி  வெற்றி பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அப்படியானால், திமுகவில் நாஞ்சில் சம்பத் சேரப்போகிறாரோ என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் நெருக்கமானவர்களிடம் பேசியபோது, “திமுகவில் சேரும்படி நாஞ்சில் சம்பத்துக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால், தற்போதைக்கு கட்சியில் சேரும் எண்ணத்தில் அவர் இல்லை. தொடர்ந்து இலக்கிய துறையில் பயணிக்கவே விரும்புகிறார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார்.” என்று கூறுகிறார்கள். நாஞ்சில் சம்பத் தரப்பில் இப்படி பதில் வந்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில், அறிவாலயத்தில் அவர் ஐக்கியமாகிவிட வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.