Nanjil Sampath C.R. Sarasvathy removal! OPS - EPS Action!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டாக பிளவுப்பட்ட அதிமுக, பல்வேறு மாற்றங்கள், குழப்பங்களுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தன. இதனை அடுத்து, டிடிவி தினகரன் தனியாக கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவின் சின்னம், கட்சி, கொடி என எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்டது.

அதிமுகவின் சில மாவட்ட செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் வேலூர் எம்.பி. செங்குட்டுவன், தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால் கட்சி தாவல் தொடரும் என கூறப்பட்டு வந்தது.

ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்வி குறித்து, அதிமுக தலைமை செயலகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அதிமுகவின் 6 மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணி அதிரடியாக நீக்கியது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 4 மாவட்ட செயலாளர்களை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். வட சென்னை, வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வெற்றிவேல் நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து என்.ஜி.பார்த்திபன் விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ரெங்கசாமியும், தேனி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தங்க தமிழ்செல்வனும் நீக்கம் செய்யப்பட்டனர். இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர்.

இதேபோல் அதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வி.பி.கலைராஜன், கட்சியில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே வி.பி.கலைராஜன் நீக்கம் செய்யப்பட்டார். நீக்கம் செய்யப்பட்ட கலைராஜனுடன் அதிமுகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அறிவித்தனர்.