Nanjil sampath advised to ops
பாஜக ஆதரவோடு செயல்படும் பன்னீர் செல்வம் பேசாமல், பாஜக-வில் சேருவதுதான் நல்லது என்று அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்ற பிறகு சசிகலாவின் கூடாரத்தில் தீவிர விசுவாசியாக மாறிய நாஞ்சில் சம்பத் பன்னீரையும் சசிகலாவுக்கு எதிரானவர்களை அனைவரையும் தாம் பேசும் கூட்டத்தில் நாறடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக துணைபொதுச் செயலாளர் தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது; அதிமுக-வை ஜெயலலிதா வழிநடத்திச் செல்ல பெரும்பங்காற்றியவர் சசிகலா. கட்சியிலோ, ஆட்சியிலோ அவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அரசியலுக்கு வருவதற்கு வழியமைத்துக் கொடுத்தவர் சசிகலா. பன்னீர்செல்வமோ, அதிமுக-வையும், சசிகலாவையும் அழிக்கப் பார்க்கிறார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், சசிகலாவுக்கு முதல்வராகவும், கட்சி பொதுச்செயலாளராகுவதற்கும் எண்ணம் இல்லை. ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், மதுசூதனன் போன்றவர்கள்தான் அவரை பொதுச்செயலாளராக, முதல்வராக வலியுறுத்தினர். ஆனால் திடீரென பாஜக உத்தரவின்பேரில், பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்து, அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
பாஜக ஆதரவோடு செயல்படும் பன்னீர் பேசாமல், பாஜக-வில் சேருவதுதான் நல்லது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 123 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே ஓ.பி.எஸின் ஆதரவு தேவையில்லை. தனக்கு, காரியம் ஆக வேண்டுமென்றால் யார் காலினாலும் விழுந்து காரியம் சாதிப்பதில் வல்லமை கொண்டவர் பன்னீர்.
இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு வழக்கிலும் லஞ்சம் வாங்கியவர்களைத்தான் போலீசார் கைது செய்வார்கள். ஆனால் டெல்லி போலீசார் முதன் முறையாக லஞ்சம் கொடுத்ததாக தினகரனைக் கைது செய்து இருக்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. அவருக்கு ஜாமீன் வழங்காமல் வழக்கு விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்கள். அதிமுக-வை வழிநடத்திச் செல்ல தகுதி படைத்தவர்கள் சசிகலாவும், தினகரனும் மட்டுமே என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், யார் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசாங்கம் தலையிட முடியாது. எனவே, மத்திய அரசு மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர் பேசினார்.
