சமீபத்தில் தினகரன் டிராவல்ஸிலும் இருந்து இறங்கிவிட்டார் நாஞ்சில் சம்பத். இறங்கியதற்கு காரணமாக, ‘இந்த கட்சியின் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவும் இல்லை. இரண்டும் இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை?’ என்கிறார். அத்தோடு நிற்காமல், ‘இப்படியொரு பெயரை  கட்சிக்கு வைப்பதன் மூலம் தமிழ் மண்ணில் திராவிடத்தை அகற்ற துணியும் அமைப்புகளுக்கு தோள் கொடுக்கிறார் தினகரன். இது பச்சைப் படுகொலை!’ என்றிருக்கிறார் ஆவேசமாக. 

இந்த நிலையில் அவரை நோக்கி எல்லோருக்கும் எழும் சந்தேகம் கலந்த கேள்வியானது, ‘ஜெயலலிதாவை இன்றும் கொண்டாடுகிறீர்களே! கட்சிப் பெயரில்  அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்திருந்த ஜெ., அக்கொள்கைகளை பின்பற்றினாரா?’ என்பதுதான். 

இதை நாஞ்சிலிடமே கேட்டுவிட்டதற்கு “ அம்மா பிறந்ததுதான் அக்ரஹாரமே தவிர, அவர் சமூக நீதி காத்த வீராங்கனை. அக்ரஹாரத்து அதிசயம்தான் அம்மா. பிற்படுத்தப்பட்டோருக்கான அறுபத்து ஒன்பது சதவீத இட ஒஉதுக்கீட்டை இந்திய அளவில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 95-வது பிரிவில் இட ஒதுக்கீடு இடம் பெற செய்தார். இந்திய அதிகார பீடத்தில் இருப்பவர்களை தன் காலுக்கு கீழே அமர வைக்கும் சங்கராச்சாரியாரை கொலை வழக்கில் கைது செய்தவர் அம்மா. ஆக அண்ணாவின் கொள்கைகளுக்கு முழு செயல் வடிவம் தந்தவர் அவர். 

ஆனால் கருணாநிதி அப்படியில்லை.  அவர் அண்ணாவின் கொள்கைகளை காக்க எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு சங்கராச்சாரியாரிடமிருந்து பிரசாதம் வரும்.” என்று வழக்கம்போல் வர்ணனை மொழியில் போட்டுப் பொளந்திருக்கிறார்.