அண்ணாவையும் , திராவிடத்தையும் தவித்துவிட்டு கட்சி நடத்தலாம் என்று டிடிவி தினகரன் நம்புவதாகவும் பச்சை படுகொலை செய்தவர் தினகரன் எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

நாஞ்சில் சம்பத் ஒரு சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் முதலில் அரசியலில் கால் பதித்த போது  திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர் வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார். பின்னர், மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் 2016 ஜனவரி 2ஆம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி நின்றார். பின்னர், திடீரென சசிகலா விசுவாசியாக மாறினார். அவர் சிறைக்கு சென்றதும் டிடிவிக்கு விசுவாசத்துடன் செயல்பட்டு வந்தார். 

இதையடுத்து நீண்ட முயற்சிகளுக்கு பிறகு தற்போது டிடிவி புதிதாக அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் அண்ணாவும் திராவிடம் என்ற பெயரும் ஓரங்கட்டப்பட்டது. 

இந்நிலையில், அண்ணாவும் திராவிடமும் இல்லாத டிடிவி அமைப்பில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாவையும் , திராவிடத்தையும் தவித்துவிட்டு கட்சி நடத்தலாம் என்று டிடிவி தினகரன் நம்புவதாகவும் அவரின் நம்பிக்கைக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் பச்சை படுகொலை செய்தவர் தினகரன் எனவும் அந்த அநியாயத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

நான் இனிமேல் அந்த அமைப்பில் இல்லை. நான் இனி எந்த அரசியலிலும் இல்லை என தெரிவித்தார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை எனவும் அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்துவிட்டு என்னால் பேசமுடியாது எனவும் தெரிவித்தார்.