கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டவர் ரூபி மனோகரன். இவர்கள் குடும்பமே பாரம்பரிய காங்கிரஸ் கட்சி தான். ரூபி மனோகரன் இந்திய விமானப்படையில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். பிறகு இந்திய விமான நிலைய ஆணையத்திலும் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பணி ஓய்வுக்கு பிறகு சென்னையில் ரூபி பில்டர்ஸ் எனும் சிறிய நிறுவனத்தை தொடங்கிய அவர் தாம்பரத்தை அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்டு சென்னையின் நுழைவு வாயிலாக மாற்றியவர் என்று புகழப்படுபவர். சுமார் 25  ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் மற்றும் பில்டிங் கன்ஸ்ட்ரக்சனில் ஈடுபட்டு வருவார்.

தாம்பரத்தை சுற்றி மட்டும் இதுவரை சுமார் 185 அடுக்குமாடி குடியிருப்புகளை இவர் கட்டிக் கொடுத்துள்ளார். சுமார் 5 ஆயிரம் வீடுகளையும் இவர் விற்பனை செய்துள்ளார். இவருக்கு கடந்த 2014ம் ஆண்டே அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் அந்த தொகுதியில் ஏற்கனவே கோலோச்சியிருந்த வசந்தகுமாருக்கு ரூபி மனோகரனால் டப் கொடுக்க முடியவில்லை. இதனால் 2014 தேர்தலில் அங்கு போட்டியிட ரூபி மனோகரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட விளவங்கோடு, கிள்ளியூர், நாங்குநேரி தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தார்.

ஆனால் அங்கு எல்லாம் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரஸ் புள்ளிகள் காத்திருந்ததால் ரூபி மனோகரனால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது இந்த முறை கன்னியாகுமரியில் களம் இறங்க ரூபி மனோகரன் டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். வசந்தகுமார் எம்எல்ஏவாக இருந்த காரணத்தினால் கன்னியாகுமரி தனக்குத்தான் என்று காய் நகர்த்தினார். ஆனால் ரூபி மனோகரனை ஓவர் டேக் செய்த வசந்தகுமார் மீண்டும் அங்கு வேட்பாளர் ஆனார். இந்த நிலையில் வசந்தகுமார் புண்ணியத்தில் நாங்குநேரி வேட்பாளர் ஆகியுள்ளார் ரூபி மனோகரன்.

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு அந்த தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடக்கூடாது என்று பெரும் முயற்சி மேற்கொண்டவர் வசந்தகுமார். கன்னியாகுமரியில் தனக்கு டப் பைட் கொடுக்கும் அவர் காங்கிரசில் வளரக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்.

ஆனால் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் சத் தொடர்பு வாயிலாக ரூபி மனோகரன் நாங்குநேரியை கைப்பற்றியுள்ளார்.