நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவு எடுத்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது வசந்தகுமார் எம்எல்ஏ ராஜினாமாவால் காலியாகியுள்ள நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அது குறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து சாதகமாக எந்த பதிலும் வரவில்லை. 

அதே சமயம் நாங்குநேரி தொகுதியில் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனை நிறுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக ஸ்டாலினிடம் கறாராகவே கூறிவிட்டு வந்தார் கே.எஸ்.அழகிரி. பார்க்க அமைதியானவர் போல் தெரிந்தாலும் அழகிரியின் அரசியல் பாணி மற்ற காங்கிரஸ் தலைவர்களை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது. அதனால் தான் நாங்குநேரியில் காங்கிரஸ் செயற்குழுவை உடனடியாக கூட்டினார் அவர்.

  

மேலும் நாங்குநேரியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரை அமோகமாக வெற்றி பெறச் செய்ய அனைவரும் உழைக்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது தெரியவந்துள்ளது. இதையே தான் கடந்த மாததே ஆசியாநெட் தமிழும் கூறியிருந்தது. 

ஆசியாநெட் கூறியபடியே நாங்குனேரியில் போட்டியிட காங்கிரஸ் கறார் காட்டுவதால் இந்த விவகாரத்தில் திமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கூட்டணிக்கு தலைமை திமுக தான். அக்கட்சியின் ஒப்புதல் இல்லாமல் நாங்குநேரியில் போட்டியிடுவதாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது சாதாரண நடவடிக்கை இல்லை. 

மேலும் செயற்குழு கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி எத்தனை நாளைக்குத் தான் கூட்டணி என்பது போன்றும் பேசியுள்ளார். இவை அனைத்தையும் திமுக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே காங்கரிஸ் – மதிமுக இடையே மோதல் உள்ளது. இந்த நிலையில் திமுகவுடன் காங்கிரசுக்கு நாங்குநேரி விவகாரத்தால் உரசல் ஏற்படலாம் என்கிறார்கள்.