ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்பதை தொடர்ந்து  சொல்லுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .  இது தொடர்பாக ஏற்கனவே  அவரின் பேச்சு  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அவர் இவ்வாறு  பேசியுள்ளார்.  தமிழர்களுக்கு துரோகம் செய்த ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் பழி தீர்த்தனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஈழ ஆதரவாளர்கள் கூட சிலர் விடுதலைப் புலிகளே தாங்கள் அதைச் செய்யவில்லை என மறுத்துள்ள நிலையில்,  சீமான் ஏன் இப்படி பேசவேண்டும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு  இது அவப்பெயரை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தனர்.  இதை காங்கிரஸ் மற்றும் பாஜக  ஆகிய இரண்டு கட்சிகளும் வன்மையாக கண்டித்தன.  அதுதொடர்பாக ஆங்காங்கே காவல்நிலையங்களிலும் சிமான் மீது  புகார் கொடுக்கப்பட்டு அதற்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியில் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,  நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் மீது வழக்கு தொடர்ந்தவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.  வழக்கு தொடுத்தவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்து விடுங்கள் என்றார்.  இல்லையேல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது எச்சரித்தார். 

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று தொடர்ந்து சொல்லத்தான் செய்வோம்  எனக் குறிப்பிட்டவர்,  இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சமாட்டோம் என்றார் .  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வன்முறைக்கு  எதிரான வன்முறையும்  அகிம்சை தான் என கூறினார் என்றார்.  மக்கள் விடுதலைக்காக பாடுபட்ட  தலைவர் பிரபாகரனை தீவிரவாதி எனவும்,  வெறும் சினிமாவில் தோன்றி நடிக்கும் ரஜினியை தலைவன் என்றும் கூறும் அவலம்  தமிழகத்தில் உள்ளது என்றார் .  எந்த மாநிலத்திலும்  இல்லாத ஒன்றாக சினிமா நடிகர்களை தலைவனாக கொண்டாடும் மனநோய் தமிழகத்தில் மட்டுமே உள்ளது என்றார்.