Asianet News Tamil

காசு இல்லை என கையேந்தும் மோடி , இதற்கு என்ன பதில்..?? வெகுண்டெழுந்து வெறித்தனம் காட்டும் சீமான்..!!

ஆட்சியதிகாரம் யாருக்கானது? வாக்குச்செலுத்திய மக்களுக்கானதா? தேர்தல் நிதியளித்த தனிப்பெரு முதலாளிகளுக்கானதா? யார் பதில் சொல்வது?

namtamilar party coordinator seeman asking central government and warning also
Author
Chennai, First Published May 1, 2020, 11:42 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்கள் யாவரும் செய்வதறியாது வீட்டில் முடங்கிக் கிடக்கையில், 45 கோடி அடித்தட்டு உழைக்கும் மக்கள் பசியோடும், பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயினைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தி நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதமும், இந்திய ரூபாயின் மதிப்பும் பன்மடங்கு சரிந்து இந்தியாவின் பொருளாதாரம் அதளபாதாள வீழ்ச்சியைச் சந்தித்து, பணவீக்கமும், விலைவாசியும் நாள்தோறும் உயர்கையில் அதனைச் சரிசெய்வதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு தனிப்பெரு முதலாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. 

பண மதிப்பிழப்பு எனும் மிகத் தவறான முடிவும், சரக்கு மற்றும் சேவை வரி எனும் பிழையான வரிவிதிப்புக்கொள்கையும் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பிளந்து சிறு, குறு தொழில்கள் யாவற்றையும் நலிவடையச் செய்திருக்கும் சூழலில் அவர்களைக் கைதூக்கிவிட்டு மேலெழச் செய்ய முயற்சியெடுக்காத மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்ப் பாடுபடத்துடிப்பது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இயலாது மத்திய ரிசர்வ் வங்கியிலுள்ள ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியிருப்பைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் பொருளாதார நிலையிலுள்ள மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகளின் வாராக்கடனை வசூலிக்க முன்வராது அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டிய தேவையென்ன? லவங்கிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து திவாலாகிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடனை சத்தமின்றித் தள்ளுபடி செய்ய வேண்டிய நிர்பந்தமென்ன வந்தது? 

கொரோனோ நோய்த்தொற்று மீட்புப்பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதியுதவி கோரும் பிரதமர் மோடி, 68 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிக்காது விடுவிக்க வேண்டிய மர்மமென்ன?   சிறு, குறு, குடிசைத்தொழில்களையும், விவசாயத்தையும் காப்பதற்கு எவ்விதப் பொருளாதார முன்னெடுப்புகளையும் இதுவரை செய்திடாத மத்திய அரசு, ஒரு மாதகால ஊரடங்கிற்கே நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி , வரிவருவாயை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலையில் பொருளாதாரத்தை வைத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட மத்திய அரசின் நிதி பங்களிப்பைக் குறைத்து முறையாக வழங்கத் தவறிய மத்திய அரசு, மாநிலங்களுக்குச் சேர வேண்டிய பேரிடர் கால நிவாரணநிதியில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் குறைந்தபட்ச தொகையைக் கூடத் தரமறுக்கும் மத்திய அரசு, மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய மக்களிடமே நிதிகேட்டு நிற்கும் நிலையிலுள்ள மத்திய அரசு, எதன் அடிப்படையில் பெருமுதலாளிகளின் கோடிக்கணக்கான வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முன்வந்தது? பதில் சொல்வாரா பிரதமர் மோடி? 

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கையிலும் தனிப்பெரு முதலாளிகளின் நலனையே முதன்மைப்படுத்துகிறார்களென்றால் இந்த ஆட்சியதிகாரம் யாருக்கானது? வாக்குச்செலுத்திய மக்களுக்கானதா? தேர்தல் நிதியளித்த தனிப்பெரு முதலாளிகளுக்கானதா? யார் பதில் சொல்வது? இத்தொகையானது பல மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா பேரிடர் நிவாரண நிதியைவிட அதிகம் என்பதன் மூலம் முதலாளிகள் மீதான மத்திய அரசின் பாசத்தினையும், நாட்டு மக்கள் மீதான வஞ்சகப் போக்கையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிகாரக்குவிப்பிலும், எதேச்சதிக்காரப்போக்கிலும், முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டிலும் ஈடுபட்டு, பிழையான முடிவுகளாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டு மக்களை வாட்டி வதைத்துச் சுரண்டலில் ஈடுபடும் இக்கொடுங்கோன்மை அரசு வீழ்ந்தொழியும் நாள் வெகுதொலைவில் இல்லை என மத்திய அரசிற்கு இதன்வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன் என நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios