கள்ளக்குறிச்சி தொழிலாளர்களுக்கு கேரளாவில் முழு பாதுகாப்பு ,  உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளக்குறிச்சி தொழிலாளர்கள் கேரளாவில் உணவின்றி தவிப்பதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.  இதுகுறித்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பாதுகாத்திட தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பேரில் கேரள அரசு அவர்களுக்கு முழு உதவிகளை செய்து வருகிறது .  அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம்  திருநாவலூர் ஒன்றியத்தை சேர்ந்த நெமிலி கிராமத்தில் வசிக்கும் 43 ஆண் பெண் தொழிலாளர்கள் ,  பிழைப்பதற்காக கேரளாவிற்கு சென்று வேலை பார்த்து வந்தனர் .

  

இதேபோல் திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 24 பேரும் நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 33 தொழிலாளர்களும் சின்னசேலம் தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேரளாவில் கொல்லம் ,  மலப்புரம் ,  எர்ணாகுளம் ,  கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினக்கூலி வேலை பார்த்து வந்தனர் ,  கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து மத்திய  அரசு ஊரடங்கு அறிவித்ததால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கேரளாவில் சிக்கிக்கொண்டனர் . இதனையடுத்து  உள்ளூரில் உள்ள உறவினர்கள் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர் . இதனையடுத்து கள்ளக்குறிச்சி  ஆட்சியர் ,  உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அதிகாரிகளுக்கு தொழிலாளர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுகோள் விடுக்கப்பட்டது .  

அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில தலைமை மூலம் கேரள அரசுக்கு அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . அதனடிப்படையில் உடனடியாக அத்தனை தமிழக தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு தங்குமிடம் உணவு மற்றும் உதவிகள் அத்தனையும் கேரளா அரசு நிர்வாகமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் செய்து கொடுத்தனர் .  போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் சொந்த கிராமத்திற்கு அவர்களை அழைத்து வர இயலாத சூழல் நிலவுவதால் ஊரடங்கு முடிந்தவுடன் அவர்கள் ஊர் திரும்புவார்கள் என கேரளா  அரசு  தெரிவித்துள்ளது .  கள்ளக்குறிச்சி தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் கேரளாவில் இல்லாத நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கேரளாவில் உணவு இருப்பிடம் உடை தவிப்பதாக கூறியுள்ளார் .

இது உண்மைக்கு புறம்பானது, தகவல் எதையும் தீர விசாரிக்காமல் சீமான் தவறான தகவலை பிரச்சாரம் செய்வது சரியல்ல .  கடந்த மார்ச் 26ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தொழிலாளர்கள் தொடர்பான மனு அளிக்கப்பட்டுள்ளது .  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுத்ததா என்ற எந்த தகவலும் இல்லாத நிலையில் ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது உரிய முறையில் தலையிட்டு தொழிலாளர்களை பாதுகாத்து உள்ளது எனவே சீமான் கூறும் அத்தனையும் உண்மைக்கு மாறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சீமானை கடுமையாக தாக்கியுள்ளது .