பால் விலை உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என நமது அம்மா நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. 

இது தொடர்பாக நமது அம்மாவில், ஒருபுறம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது, மறுபுறம் பால் விலையை உயர்த்தக் கூடாது என்று கூறியிருப்பது, இவை இரண்டும் உணர்த்துவது ஒன்றே தான். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் ஞானம் மட்டுமல்ல, பொதுவான புரிதல் என்பது கடுகளவும் இல்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.

ஏற்கனவே எடப்பாடியார் பதவி விலக வேண்டும் என்கிற ஒரே வரியை மூன்று ஆண்டுகளாக கூறி வந்தவர், அதற்கான காரணங்கள் அத்தனையும் இப்போது தீர்வுகளை எட்டிவிட்ட நிலையில், புதிதாக இந்த அரசு மீது புகார் சொல்வதற்கு வாய்ப்பு கிட்டாத நிலையில், இப்போது உறக்கத்திலிருந்து எழுந்தவர் போல உளற தொடங்கி விட்டார். தன்னைத்தானே ஜப்பான் துணை பிரதமர் என்கிறார். மம்தா பானர்ஜியை கூட்டிவந்து மேற்க மாநில முதல்வர் என்கிறார். அனிதாவை சரிதா என்கிறார். இந்திய நாட்டின் குடியரசு தினத்தை டிசம்பர் 15 என்றும் தன் தேசப்பக்தியை நாடே சிரிக்க எடுத்து வைக்கிறார்.

 

இதையும் படிங்க;- முன்ஜாமீன் மறுத்து 3 நாள் அவகாசம்... விரைவில் கைதாகிறார் ப.சிதம்பரம்..?

கணிதமும் தெரியவில்லை, வரலாறும் அறியவில்லை. பொருளாதாரம் புரியவில்லை. நாளுக்கு நாள் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் உள்ளத்தில் நிறையாசனமிட்டு நீங்கா பெருமைகளை குவித்துக் கொண்டிருக்கும் எடப்பாடியார் அரசை எதிர்ப்பதற்கு பரிதாபத்திற்குரிய இந்த எதிர்க்கட்சி தலைவருக்கு இப்போது காரணங்களும் கிடைக்கவில்லை என்றால் உண்மையாகவே பொது அறிவும், பொதுவான அறிவும் இல்லாத தலைவராக திமுக தலைவர் இருப்பதை நினைத்து கவலைப்பட தோன்றுகிறது என்றும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.