ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.   

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.விசாரணை நடத்தி வந்தது. 

இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி, ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, இதற்கான தடை, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி, 25-ல் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மேல்முறையீடு செய்ய ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 3 நாள் அவகாசம் அளித்துள்ளது. 

இதற்கிடையே, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, விமானங்களுக்கு வழித்தடங்கள் ஒதுக்கியதில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.