இடைத்தேர்தல் வந்துவிட்டால் தாங்கள் வழங்குகிற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புண்டா? ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளி விடுவது ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.

அடகு வைத்த நகையும், இட ஒதுக்கீடு வலையும் என்ற தலைப்பில் நமது அம்மாவில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், தேர்தல் வந்தால் மக்களை ஜாதி கூறுகளாக கண்கொண்டு பார்த்து நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்கிற வேலையை திமுக வெட்கம் இல்லாமல் செய்கிறது. அதிலும் குறிப்பாக இடைத்தேர்தல் வந்துவிட்டால் தாங்கள் வழங்குகிற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புண்டா? ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளி விடுவது ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டது. 

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்களின் போது ஏழை, எளிய மக்கள் அடகு வைத்த 5 சவரன் நகையை திருப்பி தருவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என அள்ளிவிட்ட பொய்களை என்னாச்சு என மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில், திருவாரூர் துண்டுச்சீட்டு புதிய வலையை இட ஒதுக்கீடு என்னும் பெயரில் விரிக்க பார்க்கிறார். 

ஆனால், தமிழகத்து மக்கள் தெளிவாகவே அறிவார்கள். திமுகவின் வாக்குறுதியின் ஆயுள் வாக்குப்பதிவு நடந்து முடியும் நாள் வரை தான் என்பதை... ஆளுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம், தங்கள் குடும்பத்தின் பிடியில் இருந்து கேபிள் தொழிலை மீட்டு அரசு கேபிள் அமைக்கிறோம். விவசாயிகளுக்கு இலவசமாக மின் மோட்டார் வழங்குகிறோம் இப்பயெல்லாம் கருணாநிதி அள்ளி விட்ட பொய்கள் இன்னும் தமிழக மக்களின் நெஞ்சத்தில் நிழலாடி கொண்டு தான் இருக்கிறது. எனவே இப்போது அவரது புத்திரர் புதிதாக எடுத்து விடுகிற புத்தம் புது புளுகுகளை நம்புவதற்கு தமிழகத்து மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போய் விடவில்லை.

திமுக ஆட்சிக்கும் வர வேண்டாம், வாக்குறுதி தகிடுதத்தங்களை இனிமேலும் தொடர வேண்டாம் என்பது தான் இரண்டு தொகுதிகளிலும் மக்கள் தரப்போகிற தீர்ப்பாக போகிறது என நமது அம்மா நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. அண்மைக்காலமாக திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைமைகள் கட்சி நாளேடு வாயிலாக எதிர்க்கட்சிகள் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.