Namadhu Amma daily about cauvery issue

காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தாமதப்படுத்தி கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என தாய் காட்டும் அன்பில் தடுமாற்றம் இருக்கலாமா என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் மோடிக்கு நறுக் கென கேள்வி எழுப்பியுள்ளனர்.

காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அவகாசம் கோரியது.

கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி வழக்கில் மூன்றாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கோரியது. பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்தது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் போக்கு தமிழகத்துக்கு எதிராக உள்ளதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நமது அம்மா நாளிதழ் கவிதை வடிவில் நறுக் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என தாய் காட்டும் அன்பில் தடுமாற்றம் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வாக்குகளை மனதில் வைத்து வஞ்சகம் புரியலாமா ? தேர்தல் முடிவை வைத்து தீர்ப்புகளை கிடப்பிலிட்டு திரியலாமா ? என்றும் கேட்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்வதாக மறைமுகமாக அந்த நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்நாடு என்று இந்தியாவை அழைப்பது அனைத்து மாநில மக்களையும் சமமாக நடத்துகிற சத்தியத்தில் நிலைக்க வேண்டும் என்பதால்தானே என்று கேட்டுள்ள நமது அம்மா நாளிதழ், அது மொத்தமும் பொய்ப்பதா, அதை மோடி அரசு முன்னின்று சிதைப்பதா என்றும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.