ஈரானில் 3 மாதங்களுக்கு மேலாக உணவு உறைவிடமின்றி சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை தமிழக அரசே பயணக் கட்டணம் செலுத்தி மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார் .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  கிட்டதட்ட 240 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன .  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊடரங்கு உத்தரவு கடைபிடிக்கப் பட்டு வருகிறது .  இந்நிலையில்  வலைகுடா நாடுகளில் ஒன்றான  ஈரான் நாட்டிற்கு மீன்பிடித்  தொழில் செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 650 மீனவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்றுமாத காலமாக உணவு, குடிநீர்,  உறைவிடம் இன்றி சிக்கித்தவித்து வருகின்றனர். 

இவர்களுக்கு தேவையான எவ்வித உதவியையும் வேலைகொடுத்த நிறுவனமோ, ஈரான் அரசோ, இந்திய தூதரகமோ செய்யாமல் கைவிட்டது. இதுதொடர்பாக கடந்த மாதம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது தற்போதைக்கு அவர்களை அழைத்துவரும் நிலை இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்த  நிலையில் தற்போது கப்பல் மூலம் இந்திய அரசு அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அழைத்து செல்வதற்கான கட்டணமாக 100 அமெரிக்க டாலர்கள் அதாவது கிட்டதட்ட 7500 ரூபாயை இந்திய வெளியுறவுத்துறை சார்பாக கட்டணமாக கேட்பதாக தகவல் வருகிறது. ஏற்கனவே மூன்று மாதமாக வேலை, வருமானம் இல்லாது உணவுக்கே வழியின்றி தவித்து வருபவர்களிடம் பயணக் கட்டணம் கேட்பது என்பது சிறிதும் மனித தன்மையற்றச் செயல்.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் கவனமெடுத்து கட்டண விலக்கு பெற்றுக்கொடுத்தோ அல்லது கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியோ அவர்களை உடனடியாக தமிழகத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  அதேபோல, அந்தமானில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காகச் சென்ற தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப முடியாது அங்குப் பசி, பட்டினியோடு தவித்து வரும் நிலையில் அவர்களையும் , மாலத்தீவு சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களைம் மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.