முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

28 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து தங்களை விடுதலை செய்ய இவர்கள் உள்பட இக்கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரும் போராடி வருகின்றனர். இதற்கிடையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக பரோலில் செல்ல சட்டப்போராட்டம் நடத்தினார். அதன்படி கடந்த 5-ந் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. 

இதையடுத்து வேலூரில் அவர் தங்கப் போகும் வீடு, அதற்கான ஆவணங்கள், அவருடன் வேறு யார் ?யார் ? தங்குகின்றனர் என்பது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிறைத்துறை கேட்டிருந்தது.

அதன்படி வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள சிங்கராயர் என்பரது வீட்டில் நளினி தங்க உள்ளார். கடந்த 13-ந் தேதி  அதற்கான அனைத்து ஆவணங்களும் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது, 

ஆனால் சிறை அதிகாரிகள் நளினியை விடுவிக்காமல் காலதாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை நளினி வேலூர் மகளிர் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சத்துவாச்சசேரியில் உள்ள சிங்கராயர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நளினியுடன் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தங்கிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த வீட்டில் தங்கியிருந்த படியே தனது மகளின் திருமண ஏற்பாடுகளை நளினி கவனிக்க உள்ளார்.