தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலராக, நடிகை நக்மாவை நியமித்ததும், அவருக்கு தமிழகம், புதுச்சேரி என, இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இரு மாநிலங்களில், புதுச்சேரி மகளிர் காங்கிரசாரிடம் மட்டும், நக்மா இணக்கமாக இருந்தார்.தமிழக மகளிர் காங்கிரசில், குஷ்பு தலைமையில், ஒரு கோஷ்டியும், ஜான்சிராணி தலைமையில், மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டன. நக்மா பொறுப்பாளரானதும், அவரது ஆதரவு பெற்ற, மாநில துணைத் தலைவர், ஆலிஸ் மனோகரி தலைமையில், மூன்றாவது கோஷ்டி உருவானது.இதற்கிடையில், அரசியலில் யார் சீனியர், ஜூனியர் என்ற, கவுரவ பிரச்னை, குஷ்பு - நக்மா இடையே வெடித்தது.

மற்றொரு புறத்தில், ஜான்சிராணிக்கும் நக்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில், தன்னிடம் ஆலோசிக்காமல், ஜான்சிராணி தன்னிச்சையாக செயல்படுகிறார் என, நக்மா கருதினார். இருவரும், ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர். இவர்களின் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க, டெல்லி மேலிடம் தனிக் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். நக்மா ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.