தமிழக பாஜக  தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே, தமிழக பா.ஜனதாவின் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய தலைவர் ரேஸில்  எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலருடைய பெயர்கள் அடிபட்டன. சமீப காலமாக மாநில துணைத்தலைவர்கள் கருப்பு முருகானந்தம், குப்பு ராமு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு தமிழக பாஜக  தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இவர்களில் யாருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம் என்பது குறித்து பாஜக  மேலிடம் பரிசீலனை செய்தது. இதில் மூத்த நிர்வாகியான குப்பு ராமுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் ஒன்றின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, அதை சார்ந்த கருப்பு முருகானந்தத்தை நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் கருதியது. 

இந்த நிலையில், அதே சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமிக்கலாம் என்று கட்சி மேலிடத்துக்கு தமிழக பாஜகவின்  முக்கிய மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்றைய நிலவரப்படி தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர். அரசியலில் பிரபலமானவர். தமிழக மக்களுக்கு அறிமுகமானவர்.

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழக பாஜக  குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
நயினார் நாகேந்திரன் ஏற்கனவே, அ.தி.மு.க.வில் பிரபலமானவர். அமைச்சராகவும் இருந்தவர். 

தற்போது பாஜகவின்  முக்கிய பதவியில் இருக்கிறார். எனவே, தமிழக மக்களை எப்படி அணுக வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் என்பதால் நயினார் நாகேந்திரனை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.