நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்ற முதல்வரின் அறிவிப்பை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 80 ஆண்டுகாலமாக மொழி தொடர்பான போராட்டம் நடந்து வருகிறது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கடைபிடித்த கொள்கையைத் தான் முதல்வர் எடப்பாடி கடைப்பிடிக்கிறார். 

மேலும், பேசிய அவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்றார். அதேபோல், நயினார் நாகேந்திரனும் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.