தமிழக  அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் விக்கிரவாண்டி , நாங்குநேரி இடைத்தேர்தலில் பிசியாக உள்ள நிலையில், நாகை சட்டமன்ற உறுப்பினர் டெங்கு, மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். அவரின் செயல் பொது மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

 

இன்று காலை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து  ஆறுதல் கூறியதுடன், மருத்துவ சேவை குறித்தும்  விசாரித்தார்.கூடுதல் நோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு, படுக்கைகளின்  எண்ணிக்கையை அதிகபடுத்துமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதுடன், அங்குள்ள உணவு கூடத்திற்கு சென்று சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார். 

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக தயாரிக்கப்பட்ட  நிலவேம்பு கசாயத்தை தான் குடித்துப் பார்த்ததுடன், நோயாளிகளுக்கு அவரே விநியோகம் செய்தார். இங்கு தினமும் 3 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதை பாராட்டிய அன்சாரி,  பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அங்குள்ள ஆயுர்வேதம், சித்தா, யுனானி பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தினமும் 300 க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற மருத்துவமனைக்கு வருவதாக அப்போது மருத்துவர்கள் அவரிடம் கூறினர்.

இம்மாதத்தில் இதுவரை 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும், அதில் 5 பேர் கிசிச்சை பெற்று  நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர். தினமும் 3 ஆயிரம் புற நோயாளிகள் மருத்துவ மனைக்கு வந்து செல்வதாக கூறிய மருத்துவர்களிடம், விரைவில் புதிக கட்டிடம் கட்ட முயற்ச்சிகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காமல் தண்ணிகாட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் வாரந்தோறும் தொகுதிக்கு விசிட் அடித்து மக்களை நலம் விசாரிக்கும் இவரைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களை பாராட்டத்தான் வேண்டும்...