மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக விசைப்  படககுகளை நிரந்தரமாக தடை விதிக்க கோரியும், மீறி பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  22 கிராமங்களைச்  சேர்ந்த மீனவர்கள் சாலை மறியல் செய்ததோடு,பேரணியாகச்  செல்ல முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்தபோது ஏற்பட்ட கலவரத்தில் பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வம் மண்டை உடைந்த சம்பவம்  காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம். தரங்கம்பாடியில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காவைச்  சேர்ந்த 22 கிராம மீனவர்கள் சுமார்  2,000 பேர் மனித சங்கிலி அமைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக சீன இஞ்சின் விசை படகுகளுக்கு நிரந்தர தடை விதிக்க கோரியும், மீறி பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தமும் தொடங்கினர்.சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கபட்டு சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது என்றும், நிரந்தர தடை கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் பலனில்லை என்றும் மீனவர்கள் குமுறினர். 

இதில் பழையாறு,திருமுல்லைவாசல்,மடவாமேடு,பூம்புகார், சந்திரபாடி,சின்னூர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் தடையை மீறி சுருக்குமடி வலையும் அதிவேக விசைப்  படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது ஆதரவாளர்களை நண்டலாறு சோதனைச் சாவடி அருகில் திரட்டி கோஷமிட்டனர்.இதனையறிந்த 22 கிராம மீனவர்கள் அவர்களை நோக்கிப்  பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களைத்  தடுக்க முயன்ற பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வம் மீது எதிர்பாராத விதமாக போராட்டகாரர்களால் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.


" பிளாஸ்டிக் குழாய் மற்றும் கம்புகளில் கருப்புக்கொடி கட்டியிருந்தனர்.திட்டமிட்டோ அல்லது எதிர்பாராத  விதத்திலோ கொடிக்கம்பால் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்து தையல் போடப்பட்டுள்ளது. உடனடியாக தஞ்சை டி.ஐ.ஜி.,மற்றும் நாகை கலெக்டர் வருகை தந்து இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். விரைவில் இப்பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் மீனவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.மீனவக் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே நேரம் இன்ஸ்பெக்டரைத் தாக்கியது யார் விசாரணையும் நடைபெற்று வருகிறது" என்றனர் போலீஸார்.