நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,51,738ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொரோனா எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகை மக்களவை தொகுதி எம்.பி. செல்வராசுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், அவருக்கு நேற்று தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே இவருக்கு  சிறுநீரகம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலங்களில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட சட்ட உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.