தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர் என நாகையில் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், நாகைமாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் உடனான இடப்பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நாகை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள், நான்கு பேரூராட்சிகளில் உள்ள 117 வார்டுகளில் 20 வார்டுகளில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், 97 வார்டுகளில் திமுக நேரடியாகவும் களம் காண்கின்றன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், ‘விளிம்புநிலை அடித்தட்டு மக்களின் வாழ்வுநிலையை உயர்த்தவும், தமிழ்நாட்டின் உரிமைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

சமூக நீதி காப்பாற்றப்பட்டிருக்கிறது. எட்டு மாத கால ஆட்சியின் செயல்பாடுகளுக்கு இந்தத் தேர்தலில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றியை, திமுக பெறும். தற்போது, திமுக கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர். அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை’ என்று கூறினார்.