Asianet News TamilAsianet News Tamil

தமிழினம் உதிரிச்சமூகமாக மாறிப்போனதே... சீமான் வேதனை..!

உலகத்தில் தமிழன் வாழாத நாடில்லை. அவனுக்கென்று உள்ளங்கை அளவு ஒரு நாடில்லை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். 

Naam tamilar party Seeman is in pain
Author
Tamil Nadu, First Published Nov 27, 2021, 12:56 PM IST

தமிழீழமெனும் தாயக விடுதலைக்கனவை அடைய மாவீர தெய்வங்கள் மீது உறுதியேற்று உழைப்போம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகம் முழுதும் பரந்து வாழும் உயிருக்கினிய என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

இன்று மாவீரர் நாள்!
கார்த்திகை மாதத்தில், காந்தள் மலர்சூட்டி, தாயக விடுதலை என்கிற மகோன்னதமான கனவுக்காகத் தன்னுயிர் தந்த புனிதர்களைப் போற்றிப்புகழும் புரட்சி நாள். தமிழீழம் என்கிற ஒப்பற்ற நோக்கத்துக்காக, உதட்டில் நிறைந்த புன்னகையோடு மரணத்தை முத்தமிட்ட மகத்தானவர்களின் நினைவு நாள். சாதாரண மனிதர்களாகப் பிறந்து, இலட்சிய மரணத்தால் வீரசரித்திரமாக உலக வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட மாவீர தெய்வங்களைக் கொண்டாடும் திருநாள்.Naam tamilar party Seeman is in pain

வீரத்தின் அடையாளமாய் விளைந்து, பேராற்றலின் திருவுருவாய் திகழ்ந்து, சொல்லுக்கும் செயலுக்கும் இருக்கின்ற இடைவெளியை அழித்து, நம் உயிர்த்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் கட்டளைக்கிணங்க, தாய்நிலம் காக்க, தன்னலம் மறுத்து, உயிரைக்கொடையாகக் கொடுத்து, விதையாக விழுந்த மாவீரர்களைப் போற்றித்தொழும் பெருநாள்.

இம்மானுடச்சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே தோன்றிய முதல் மொழி நம் தாய் மொழி தமிழ். உலகத்தில் தோன்றிய பல இனங்கள் நதிக்கரைகளில் நாகரீகங்களை அடைந்து கொண்டிருந்த அந்நாட்களிலேயே தமிழ்த்தேசிய இனம் தனக்கெனக் கலை, பண்பாடு , இலக்கியம் ,மொழி ,வேளாண்மை ,
வாழ்வியல், அறிவியல், அறவியல் என எல்லாம் கொண்டு, அனைத்திலும் தேர்ந்த இனமாக உயர்ந்து, நிமிர்ந்து நின்றது. காற்றைக் கிழித்து, கடலை அறுத்து, சீறிப்பாய்ந்த தமிழர்களின் கணவாய்கள் சென்ற கரையோரங்களெல்லாம் தமிழர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலமாக மாறிப்போனது.

உலகை ஆண்ட தமிழன் என்ற சொற்கள் புனைவுக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட பெருமிதக் கதையாடல்களல்ல. அது தமிழர்களின் வீரத்தை பதிவுசெய்து காட்டும் காலக்கண்ணாடியின் பிரதிபலிப்பு.Naam tamilar party Seeman is in pain

நமது பாட்டன் அரசனுக்கு அரசன் அருண்மொழிச்சோழனும், அவனது அன்புமகன் அரசேந்திரச்சோழனும் புவியெங்கும் படையெடுத்து, தன் கண்ணில்படுகின்ற நிலத்தையெல்லாம் தன் காலடியில் வைத்து ஆண்டார்கள். இப்படி வரலாற்றுப்பெருமிதங்கள் பல வாய்ந்த தமிழர் இனம் காலப்போக்கில் தன் அறிவாற்றலை மறந்து, வீரத்தை இழந்து, வந்தவர்களுக்கெல்லாம் நிலத்தை, வளத்தை வாரி வழங்கி, தன் பரந்த மனத்தால் அடிமை இனமாக, உதிரிச்சமூகமாக மாறிப்போனதுதான் வரலாற்றில் மிகப்பெரிய கொடுமை. விளைவு, உலகத்தில் தமிழன் வாழாத நாடில்லை. அவனுக்கென்று உள்ளங்கை அளவு ஒரு நாடில்லை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். காலங்காலமாய்த் தொடர்ந்த இந்த அவலத்தைத் தீர்க்கத்தான், உலகத்தின் தொன்மையான ஒரு தேசிய இனம் ஒரு நாடு இல்லாமல் நாதியற்ற இனமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட அடிமைக்குலமாக மாறிவிடக்கூடாது என்கின்ற இலட்சியத்தாகத்தால்தான், தமிழீழம் என்ற நம் தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்தார்கள் நம் மாவீரத்தெய்வங்கள்.

ஒரு தனித்த நாடாக உருவாவதற்குரிய அனைத்துத்தேவைகளும், தகுதிகளும் தமிழீழம் என்கிற எங்கள் தாய்நிலத்திற்கு இருந்த காரணத்தினால்தான் எம்முயிர் தலைவர் அன்பு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி விடுதலைப்புலிகள் என்கிற தமிழீழ தேசிய இராணுவத்தை உருவாக்கி, வீரத்தையும், அறத்தையும் கொண்ட ஒரு மண்ணுரிமைப்போரை உலகமே வியக்கும் வண்ணம் எம் தமிழீழ மண்ணில் நிகழ்த்திக்காட்டினார்.

வரலாற்றில் இதுவரை தோன்றிய புரட்சிகர இயக்கங்கள் அனைத்துமே பிற நாடுகளின் உதவிகளுடன் அல்லது பல்வேறு சக்திகளின் ஊக்கத்துடன்தான் போராடுவதற்கான துணிவுபெற்று வந்திருக்கின்றன. ஆனால், எம் தலைவர் கட்டிய தமிழீழத்தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளோ தங்கள் எதிரில் உலகமே ஒற்றை அலைவரிசையில் ஒன்றாக நின்றபோதும்கூடக் கலங்காமல் களம்கண்டு, தமிழர்களின் வீரத்தை தரணிக்குப் பறைசாற்றினர். கையிலிருக்கும் ஆயுதங்களைக் கொண்டுபோரிடலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளால் விளைந்து இருக்கின்ற பல்வேறு கருவிகளைக் கொண்டு சண்டை செய்யலாம். ஆனால், உயிரையே ஆயுதமாகக் கொண்ட கரும்புலிகள் என்ற அதிஉன்னதப்படையாக உருவாகி உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர்கள் எங்கள் மாவீரர்கள் மட்டும்தான்.

உலக வல்லாதிக்கங்கள் அனைத்தும் இணைந்து எம் தாய் நிலத்தை அழிக்கத் துணிந்து சிங்கள இனவாத அரசோடு இணைந்து வரிசைக்கட்டி நின்றபோது , அடிமைச்சங்கிலி அறுக்க, தாய் நிலம் காக்க தன்மானம் போற்ற, தன்னுயிர் தருவதற்கு வரிசைகட்டி நின்றார்கள் எங்கள் மாவீரர்கள்.

விடுதலைக்கான எங்களது போர் என்பது எப்போதும் சிங்கள இனவெறி அரசோடு மட்டும்தானே ஒழிய , அப்பாவி சிங்கள மக்களோடு இல்லை என அறிவித்து, அறவழிநின்று களத்தில் மறம் பேசிய எங்கள் உயிர்த்தலைவர் பிரபாகரன் அவர்களது அடியொற்றி, இறுதிவரை மக்களைக் காக்க களத்திலேயே நின்று காவல் தெய்வங்களாக மாறிப்போனார்கள் எங்கள் மாவீரர்கள்.

தமிழீழம் என்கிற எங்களது தாய் நிலத்திற்கான விடுதலைப்போர் உலக வல்லாதிக்கச்சூழ்ச்சிகளால் முறியடிக்கப்பட்டு ஏறக்குறைய 12 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும்கூட, இன்னும் எம் தாயக நிலமான தமிழீழத்தில் போர்ச்சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளின் கதறலோசை இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஐ.நா. மன்றம் உள்ளிட்ட உலகத்தின் பெருமன்றங்களில் முறையிட்டும்கூட எவ்வித நீதியும் இன்னும் கிடைத்தப்பாடில்லை.

எம் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவுகண்டு கட்டிய பெரும் தேசமான தமிழீழ சோசலிசக்குடியரசு என்கிற எம் தேசத்தின் நிலம் இன்று திறந்தவெளி பெரும்சிறையாக, அடக்குமுறைக்கு உள்ளாகும் நிலமாக, சிங்களக் குடியேற்றங்களால் சிதையும் களமாக உருக்குலைந்து போய் இருக்கிறது. பண்பாட்டுத் திணிப்புகளாலும், நில,வள கொள்ளைகளாலும் என் தாய் நிலம் சிறுக சிறுக அழிக்கப்பட்டு வருகிறது.

கடுமையாக உலகம் முழுக்கத் தமிழர்கள் போராடியபோதும்கூட, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் எம் உதிர உறவுகளைக் கொன்றொழித்த சிங்கள அரசின் இனப்படுகொலைக்கெதிராக உலக நாடுகள் எதுவும் இதுவரை எந்த ஒற்றைச்சொல்லும் உதிர்க்கவில்லை என்பது தான் தமிழினத்தின் மீது உலகமே ஒன்று சேர்ந்து இழைத்திருக்கிற அநீதி.

இந்நிலையில் தமிழர்கள் தங்கள் அரசியல் நகர்வுகளைச் சரியாக ஒழுங்கமைத்து, உலக அரங்கில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகக் கவனித்து,சொந்த நாட்டுக் குடிமக்களையே இனப்படுகொலை செய்த சிங்கள அரசை உலக அரங்கில் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் மூலம் தனிமைப்படுத்தி, உரிய விசாரணைக்குட்படுத்தித் தண்டித்து, நேர்மையான முறையில் எம் மக்களிடையே உலகத்தின் முன்னிலையில் தனி வாக்கெடுப்பு நடத்தி தமிழீழக்கனவை நிறைவேற்றுவதற்கான சூழல்களை ஏற்படுத்த சகல வழிகளிலும் தொடர்ந்து அயராது பாடுபாட வேண்டும்.

இன்று உலக ஒழுங்குகள் மாறியிருக்கின்றன. உலக அரங்கில் புதிய அரசியல் சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன. தாயகத் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற எப்போதும் இல்லாத அரசியல் விழிப்புணர்ச்சியும், தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சியும் மிகப்பெரிய நம்பிக்கையை நமக்குத் தருகின்றன. ‘நாம் தமிழர்’ என்கிற இனமான உணர்ச்சி தமிழின இளையோர் மனதில் தீயெனப் பரவி வருகின்ற இச்சூழலில் தமிழீழம் என்கிற நமது தாயகக் கனவினை நிறைவேற்ற நம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராட வேண்டும் என்கின்ற உறுதியை நமது மாவீரர்களைச் சாட்சியாகக் கொண்டு ஒவ்வொரு தமிழனும் தங்களுக்குள்ளாக உருவேற்றிக்கொள்ள வேண்டும். தெற்காசியப்பிராந்தியத்தில் வலிமைமிக்க நாடாகத் திகழும் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கையை மாற்றுகின்ற சூழலை தமிழகத்தில் ஏற்படுகிற அரசியல் மாறுதல்கள் உருவாக்கும் என்கின்ற நம்பிக்கை 30 இலட்சம் தமிழர்கள் தந்த வாக்குகள் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. 30 இலட்சம் வாக்குகள் என்கின்ற எண்ணிக்கை கோடிக்கணக்கில் வருகின்ற நாட்களில் உயரும். அதுவே, நம் தெய்வங்களான மாவீரர்கள் கனவுகண்ட நம் இன விடுதலைக்கான வாசற்கதவாகத் திகழும். எந்த அரசியல் அதிகாரத்தால் நாம் வீழ்த்தப்பட்ட மோ, அதே அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தமிழர்களுக்கான இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான விடுதலைப்பாதையை நாம் அமைக்க வேண்டும் என்கின்ற புரிதலில் தாயகத்தமிழகத்து இளையோர் சாதி கடந்து, மதம் கடந்து ‘தமிழர்’ இன உணர்வெழுச்சியில் திரண்டெழுகின்றனர்.

சரியான திசையில் நமது விடுதலைப்பாதையை அமைத்துக் கொள்வதற்கு இருட்டுப்பாதையில் ஒளிரும் வெளிச்சப்புள்ளிகளாக நமது மாவீரர்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள். நம் உயிர் தலைவரது சமரமற்ற வாழ்வியலும், அறம் நிறைந்த போர் இயலும் நமக்குப்பாடமாக நம் விழிகள் முழுக்க நிறைந்திருக்கின்றன.

உலக அரங்கில் நம் தாயக விடுதலைக்காக நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் சிங்கள அரசு தந்திரங்களோடு எதிர்த்து வருவதை நாம் மிகச்சரியாகக் கவனித்து, மாறிவரும் உலக அமைவுகளுக்கேற்ப நமது நடவடிக்கைகளைச் சீர்செய்து ஒற்றுமையுடன் நமது விடுதலைப் பாதையில் முன்னேற வேண்டும்.Naam tamilar party Seeman is in pain

நம் தாயக விடுதலைக்காக இன்னுயிர் தந்த மாவீர தெய்வங்களை நினைவுகூரும் இந்தப் புனிதத்திருநாளில் ஈழ விடுதலையை அடைய ஒவ்வொரு தமிழரும் தங்களது உள்ளத்திற்குள் உறுதியேற்க முன்வர வேண்டும். நம் மாவீரர்கள் சிந்திய குருதி ஒரு போதும் வீணாக நம் உயிர் உள்ளவரை விடக்கூடாது. ஈழம் மலரும் காலம் வரை நமது விடுதலைப் போராட்டமும் ஓயக்கூடாது என்கின்ற உறுதியான தீர்மானிப்பை இந்த மாவீரர் நாளில் நமக்குள்ளாக நாம் விதைக்க வேண்டும்.

இன்று ஈழ விடுதலைப்போராட்டம் என்பது அரசியல் போராட்டமாக மாற்றப்பட்டு உலகம் முழுக்க வாழும் ஒவ்வொரு தமிழனின் கரங்களுக்கும் கையளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர் என்கின்ற இன உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத வேற்றுமைகளைக் கடந்த ஒரு மகத்தான பெரும் அரசியல் வெற்றியே ஈழவிடுதலையைச் சாத்தியப்படுத்தும் என்கிற புரிதலில் தமிழர்கள் இன்று, ‘தமிழ்த்தேசிய அரசியல் வெற்றியே தாயக விடுதலைக்கான வழி’ என்பதைத் தெளிந்து, துளித்துளியாய் இணைந்து, அணியமாகி வருகிறார்கள்.

இந்த மாவீரர் நாளில் உலகத்தின் அரசியல் நடப்புகளைக் கவனமாகப் பகுந்தாய்ந்து, தனித்த வழியில், நம் தலைவர் தந்த அறத்தின் மொழியில், நம் மாவீர தெய்வங்களின் மூச்சுக்காற்றின் முன்னிலையில் நமது தாயக விடுதலைக்காக, தனித்தமிழீழ சோசலிசக்குடியரசு நாட்டின் மலர்ச்சிக்காக மாவீரர்களின் புனிதக் கனவினை நிறைவேற்ற அணியமாவோம்.

நம் மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க, இன்னுயிர் தந்த எம் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மாவீரத்தெய்வங்களை நினைத்துப் பெருமிதம்கொள்கிறேன்.

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!

மாவீரர் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி!!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!!’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios