தனது அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி டெல்லியில் தனது நண்பர்களிடம் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தி.மு.க மகளிர் அணி தலைவியாகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார் கனிமொழி. இந்த எம்.பி., பதவியையும், மகளிர் அணி தலைவி பதவியையும் பெற கனிமொழி பட்ட பாடு அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். என்ன தான் கருணாநிதியின் செல்ல மகளாக இருந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக கனிமொழிக்கு தி.மு.க.வில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

தி.மு.க.வில் இருந்தாலும் கூட அக்கட்சியின் கூட்டங்களில் பேசுவதற்கான வாய்ப்பு மட்டுமே கனிமொழிக்கு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் பெரும்பாடு பட்டு கனிமொழி எம்.பி பதவியை பெற்றார். ஆனால் கனிமொழியும் – ஆ.ராசாவுடன் இணைந்து தயாநிதிமாறனுடன் மோதிக் கொண்டிருந்தார். இதனை எல்லாம் ஸ்டாலின் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இதன் பிறகு குடும்ப பிரச்சனையால் தயாநிதிமாறன் ஒதுக்கிவைக்கப்பட்ட பிறகு டெல்லியில் கனிமொழியின் கை ஓங்கியது. 2009 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற போது கனிமொழி மத்திய அமைச்சராவது உறுதி என்று பேச்சு அடிப்பட்டது. 

ஆனால் அமைச்சர் பதவியைம் கிடைக்கவில்லை. இந்த அளவிற்கு கருணாநிதி இருக்கும் போதே கனிமொழி தனக்கான இடத்திற்கு பெரும் போராட்டம் நடத்தி வந்தார். இந்த நிலையில் தான் கருணாநிதி உடல் நலிவுற்றுள்ளது. எனவே இதன் பிறகு தனக்கு தி.மு.க.வில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும். அடுத்த முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு கிடைக்குமா? மகளிர் அணி தலைவி பதவியில் தான் தொடர்வேனா? தனக்காக கட்சியில் இனி யார் பேசுவார்கள் என்றெல்லாம் கனிமொழி யோசித்து வந்த நிலையில் தான், டெல்லியில் இதை பற்றி பேசும் போது தன்னை அறியாமல் கதறியதாகவும், அவரை அவரது நண்பர்கள் சமாதானம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.