மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்? மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்? மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்?

நானும் ஹிந்துதான், என் அம்மாவும் ஹிந்துதான், என் பின்னால் உள்ளவர்கள் 90 % ஹிந்துக்கள்தான் என்று முன்பு பேசிய நீங்கள் இன்று மாற்றி பேசியதன் மர்மம் என்ன என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

மதமற்ற மண்ணின் மைந்தர்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 என்று அழைக்கப்படும் இந்த மசோதாவின் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் மதமற்ற மண்ணின் மைந்தர்கள் ஆவர். இவர்களுக்கு எந்த மதமும் இல்லை; சாதியும் இல்லை. ஆனால், இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக இவர்களுக்கு இந்துக்கள் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

 நாங்கள் இந்துகள் இல்லை

அதனால், இந்துக்கள் பட்டியலில் இந்த மக்கள் இணைந்து இருக்கிறார்கள். இது பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். அவர்களை பொருளாதார ரீதியில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மேம்படுத்தவும்; அவர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் துளி அளவுக்கூட அக்கறை செலுத்தவில்லை. ஆகவே, இந்த மக்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனம் செய்ய வேண்டும். அம்பேத்கரும் அயோத்திதாசரும் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களை பூர்வ பவுத்தர்களாக அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.” என்று திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார். திருமாவளவனின் இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியிருந்தது.

விமர்சிக்கும் பாஜக

இந்நிலையில் திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விளம்பரத்திற்காக அரசியல் வியாபாரம் செய்யும் திருமாவளவன் அவர்களே, 19/04/2019 ல் ஹிந்துவாக இருந்த பட்டியிலன மக்கள், நானும் ஹிந்துதான், என் அம்மாவும் ஹிந்துதான், என் பின்னால் உள்ளவர்கள் 90 % ஹிந்துக்கள்தான் என்று நவம்பர் 2019-ல் பாராளுமன்றத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறிய நீங்கள், இன்று இப்படி பேசியுள்ளதன் மர்மம் என்ன? யாருடன் வியாபாரம்? மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்? மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்? மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்? மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்?” என்று நாராயணன் திருப்பதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.