எனது தந்தை பிரணாப் முகர்ஜி நலமுடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ராணுவ மருத்துவமனை சார்பில் மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மரணமடைந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அது குறித்த #ripPranabMukherjee ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இருந்து வந்தது. ஆனால், இதனை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். 

இந்நிலையில், பிரணாப் மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்;- எனது தந்தை உயிருடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்துள்ளார். இதனிடையே, ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்;- பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளது.