மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடித்தவர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் இ.கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை  தன்னுடைய 67-வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நிலை பாதிப்பு, இரு எம்.எல்.ஏ.க்கள் மரணம் போன்ற காரணங்களால் அப்செட் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின், தனது பிறந்த நாளுக்கு கொண்டாட வேண்டாம்; யாரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகவை 67-ல் அடியெடுத்து வைக்கும் இனிய நாளில் இ.கம்யூனிஸ்ட் சார்பில் வாழ்த்துகிறோம். நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களில் வகுப்புவாத வலதுசாரி சக்திகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளை ஆயுதமாகக் கொண்டு உறுதியாக போராடி வருபவர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடித்தவர். இவரது பரந்துபட்ட சிந்தனையும் ஜனநாயக உணர்வும் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் பொறுப்பில் பல சாதனைகள் படைத்திட, அவர் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.