தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டு, இன்று நிற்கதியில்லாமல் நட்டாற்றில் நிற்கும் மக்கள் இயக்கங்களில் மிக முக்கியமானவை கம்யூனிஸ்டுகள்தான்.  தேசிய அளவில் அவர்களின் நிலை இப்படியிருந்தாலும் தமிழகத்தில் அந்தோ பரிதாப நிலையில்தான் இருக்கிறார்கள். 

தி.மு.க., அ.தி.மு.க. என்று ஒவ்வொரு தேர்தலிலும் முதுகு விட்டு முதுகு தாவி ஆதாயம் தேடுவதே அவர்களின் இயல்பு. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மாறுதலுக்காக மக்கள் நல கூட்டணி என்று 3வது அணியொன்றை அமைத்துப் பார்த்தார்கள். மரண அடி வாங்கி சட்டமன்றத்தில் பூஜ்யமாகியதுதான் மிச்சமானது பாவம். 

இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக தி.மு.க.வின் மேடைகளில் கம்யூனிஸ்டுகளை காண முடிகிறது. அதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை விட இந்திய கம்யூனிஸ்ட் அதிக நெருக்கமாக தி.மு.க.வுடன் நட்புறவு காட்டி வருகிறது. கருணாநிதியை நினைக்கும் போதெல்லாம் எரித்துவிடுவது போல் பேசும் தா.பாண்டியனே ‘கலைஞரின் மகனே வருக! நல்லாட்சி தருக!’ என்று ஸ்டாலினை விளித்தது, கம்யூனிஸ்டுகளின் இயலாமையின் உச்சம். 
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக பேசியிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான இரா.முத்தரசன்...

“கர்நாடகாவுல வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி. ஜெயிப்பது ஒன்றே மோடியின் இலக்கு. அதுக்காகத்தான் காவிரி விவகாரத்தில் தமிழகத்தை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். மனப்பூர்வமாக நிச்சயம் மேலாண்மை வாரியத்தை அமைக்கவே மாட்டார் மோடி. 

அட அவரை விட்டுத் தள்ளுங்க. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் அப்படிங்கிற எண்ணம் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்துக்கே கிடையாதே. மத்திய அரசுக்கு எதிராக போராட அவரு தயாரில்லை, உண்ணாவிரதம் நடத்தியது ஜஸ்ட் தமிழர்களின் கோபத்துல இருந்து தப்பிப்பதற்கான நாடகம் தான். 
அ.தி.மு.க.வில் எல்லாரும் நடிச்சுட்டுதான் இருக்கிறாங்க. மத்திய அரசை மீறி அவங்களால் எதுவும் செய்ய முடியாது, செய்யும் தைரியமும் இல்லை அவங்களுக்கு.” என்றிருக்கிறார்.