"வேளாண் சட்டங்களை விளக்கி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழக பாஜக சார்பில் பரப்புரை செய்யப்படும் எனவும், தமிழக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாலேயே ஒருநாள் வேலை நிறுத்தம் தோல்வி அடைந்தது என்றும்  பா.ஜ.க மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 139 வது  பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் பாரதியாரின் திருவுருவ படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், இல.கணேசன் , நடிகை குஸ்பு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் முன்னணிப் பேச்சாளராகவும் திகழ்ந்த பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார், அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை எல்.முருகன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன். பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். 

வேளாண் திருத்த சட்டம்  விவசாயிகள் உற்பத்தி் செய்யும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ள உதவும். இச்சட்டத்தின் மூலம் கமிசன் மண்டி , கமிசன் ஏஜெண்ட் இல்லாமல் விவசாயிகள் எங்கு  வேண்டுமானாலும்  தங்கள் விளைபொருட்களை விற்க முடியும்.  காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் அமைச்சராக இருந்த சரத்பவார் இந்த சட்டம் காங்கிரஸ் கட்சி மூலம் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தின் சாரங்களை கூறியிருந்தனர். இப்போது திமுக காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். திமுக அறிவித்த ஒரு நாள் வேலை நிறுத்தம் தமிழகத்தில் தோற்றுப்போய் விட்டது.புதிய வேளாண் சட்டங்கள் மூலம் மதுரை மல்லிகை , கிருஷ்ணகிரி தக்காளி போன்றவற்றை உற்பத்தியாளர்களான விவசாயிகள் நேரடியாக டெல்லி, லண்டன் என பல்வேறு நகரங்களுக்கும்  ஏற்றுமதி செய்யலாம். 

மேலும் குறு சிறு நிறுவனங்களின் முதலாளிகளாக, பங்குதாரராக விவசாயிகள் மாறலாம். இதை உணர்ந்துதான் தமிழக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவு தந்துள்ளனர். மத்திய அரசு மூலம் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. 'விவசாயிகளின் நண்பன் மோடி ' எனும் இயக்கம் பாஜகவால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 1000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு வேளாண் சட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவோம். இதில் பாஜகவின் தேசியளவிலான தலைவர்கள் பங்கேற்பார்கள். வேல் யாத்திரையை வெற்றியடைய செய்த  ஊடகங்கள், தமிழக மக்கள்,பாஜகவினருக்கு நன்றி.

மேற்கு வங்கம் , கேரளாவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஜே.பி.நட்டாவின் வாகனம் மீது தாக்குதல் நடந்துள்ளது. அடுத்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் . பஞ்சாப் , ஹரியானாவில்  கமிசன் கடைகளின் ஆதிக்கம் அதிகம். பஞ்சாபில் விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு கமிசன் கடைகளில் 9 விழுக்காடு வரி அரசால்  விதிக்கப்படும். வரும் டிசம்பர் 30,31,1 ம் தேதிகளில் ஜே.பி.நாட்டா தமிழகம் வர வாய்ப்பு உள்ளது " என்று கூறினார்.