சேலத்தில் காவல் நிலையம் அருகே ரஜினி ரசிகரை அரிவாளால் 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் இரும்பாலை அருகே உள்ள கருக்கல்வாடி அழகுசமுத்திரம் நேரு நகரை சேர்ந்தவர் ரஜினி பழனி (வயது 46). இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  

நேற்று காலை வழக்கம் போல ரஜினி பழனிச்சாமி அழகாபுரம் வந்து கார் எடுக்க நடந்து சென்றுக்கொண்டிருந்த போது மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் ரஜினி பழனிச்சாமியை காவல் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். 

இந்த விவகாரம் தொடர்பாக  ரஜினிபழனியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நான் சின்ன வயதிலிருந்து ரஜினியின் தீவிர ரசிகன். என் தலைவர் ரஜினியை முதலில் சீமான் ஒருமையில் விமர்சனம் செய்தார். அதையடுத்து நானும் சீமானை ஒருமையில் விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். அதைத் தொடர்ந்து சீமான் கட்சிக்காரர்கள் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் சீமானின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பழனிசாமி புகார் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.