அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தார் மற்றும் அவரை சார்ந்தவர்களிடம் எந்தவிதமான சோதனையும், விசாரணையும் நடத்தவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

ஒரு குடும்பத்தில் 3 நபர்கள் இருந்தால் தீபாவளிக்காக 14 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றும்,  தேசிய கடல் மீனவர் சேமிப்பு நிவாரண திட்டம் மூலம் தீபாவளிக்கு முன் அவர்களுக்கு அவ்உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தக்க சமயத்தில் பணம் அளித்திருப்பது சிறப்பானது என்றும் கூறினார். மேலும், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தை கொச்சை படுத்துவது கீழ்த்தனமான அரசியல் என்று கூறிய அவர்,  திமுகவின் அரசியலே கீழ்தரமானதுதான் என்றார். மருத்துவமனைகளில் இருந்தவர்கள், இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது திமுகவின் வழக்கம் எனவும், திமுகவின் பேச்சு பொதுமக்களுக்கு அறுவெறுக்கத்தக்கதாக தான் இருக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ச்சியாக இவ்வாறு செயல்பட்டால் திமுகவை பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க நேரும் எனவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், முரசொலி ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்றும்,  மஞ்சள் பத்திரிக்கையில் தொடர்ச்சியாக ஆபாசமான வார்த்தை இருந்தால் அதிமுக தொண்டர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் எனவும், பத்திரிக்கை வெளியில் வராது என்றும் எச்சரித்தார். எம்.ஜி.ஆரின் கை கால் பிடித்து கெஞ்சியதன் காரணமாக ஊதியம் இல்லாமல் நடித்து கொடுத்தார் என்றும், தமிழனுக்கு உண்டான நன்றி உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், எழுதுவதை நிறுத்தாவிட்டால் நமது அம்மா பத்திரிக்கையில் உங்களின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏற்றப்படும், மானம் கப்பல் ஏறிவிடும், எங்களுக்கும் பத்திரிக்கை உள்ளது என்றும், எங்களுக்கும் கவுன்டர் கொடுக்க தெரியும் எனவும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

துரைக்கண்ணு இல்லத்தில் அவரது குடும்பத்தார் மற்றும் அவரை சேர்ந்தவர்களிடம் எந்தவிதமான விசாரணையும் சோதனையும் நடத்தப்படவில்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார். பா.ஜ.கவை பார்த்து அதிமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு. பயம் என்ன வென்றே தெரியாமல் வளர்ந்த இயக்கம் அதிமுக என்றும், தன்மானம், வீரம் செழித்த தொண்டர்கள் தான் அதிமுகவினர், எந்த இயக்கத்தை பார்த்தும் எங்களுக்கு பயம் இல்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், எல்.முருகன் கருத்திற்கு பதிலளித்த அவர், முதல்வர் வேட்பாளர் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியை கைப்பற்றும். அரிதிப் பெரும்பான்மையில் அதிமுக தான் வெற்றி பெரும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார். அதிமுக , பா.ஜ.க விற்கு இடையே கருத்து வேறுபாடுகளும் இல்லை முரணாடுகளும் இல்லை என கூறிய அவர், சமூக வளைதளங்களில் யாரை வேண்டுமானாலும் go back என்று trend ஆக்கலாம், அந்த வகையில் தான் வாங்கிய பணத்திற்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார் என்றும் அவர் விமர்சனம் செய்தார். 

முதலமைச்சர் கூட்டத்தில் அரசின் நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதாக கூறிய அவர், முதல்வர் கூட்டத்திற்கு வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும், தொற்று இல்லை என்று உறுதிப்படுத்திய பின்தான் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.கமல்ஹாசன் கருத்திற்கு. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அடுத்த ஆண்டும் முதல்வர் தான் கொடியேற்றுவார் என்றும், அவர்களுக்கு (ம.நீ.ம) நிறைய கோட்டை உள்ளதாகவும், மீறி ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறவர்கள் செஞ்சி கோட்டையில் வேண்டுமானால் ஏற்றிக் கொள்ளலாம் என தெரிவித்தார். 

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தான் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறிய அவர்,  நகமும் சதையும் போல் காங்கிரஸ் திமுகவுடன் ஒட்டி உறவாடி வருவதாகவும் இது எப்படிப்பட்ட முரண்பாடு என்றும், இதுப்போன்ற முரண்பாடு அதிமுக கூட்டணியில் இல்லை எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சி 1967-ல் இந்தி திணிப்பு நடந்தபோதே ஓரம் கட்டப்பட்டுவிட்டது, இனி அவர்களுக்கு வாய்ப்பு இல்லை,  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் யார் முதுகிலாவது சவாரி செய்ய வேண்டும், இப்போது திமுக முதுகில் சவாரி செய்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.