ஆதாயம் இன்றி, பாமக நிறுவனர் ராமதாஸ், எந்த அரசியல் வியாபாரமும் நடத்தியதில்லை என குறித்து முரசொலி நாளேடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

இது தொடர்பாக, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் மருத்துவர் அய்யா, மகன் சகிதம் மர்மமான முறையில் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். பிரதமரை சந்திக்கச் சென்றதில் என்ன மர்மம் என்று கேட்கலாம்? எதற்கெடுத்தாலும் அறிக்கை விட பேப்பரையும், பேனாவையும் கையில் வைத்து அலையும் அய்யா, பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து ஒரு அறிவிப்பு கூட செய்யாது டெல்லி சென்றுள்ளார்! இது மர்மல்லவா?

பிரதமரிடம் அய்யா வைத்ததாகக் கூறும் கோரிக்கைகள், பல மாதங்களாக செவிடன் காது சங்காக ஊதப்படும் சமாச்சாரங்கள் தானே. இந்தக் கோரிக்கைகளை தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வைத்துக் கொண்டுதானே இருக்கின்றன. அதாவது, ராஜூவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதும், காவேரி- கோதாவரி இணைக்கப்பட வேண்டும் என்பதும், டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும், புதிய கோரிக்கைகள் அல்லவே!

* இதனை பிரதமரிடம் மீண்டும் எடுத்துச் சொல்ல, குறைந்த பட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களோடு சென்று சந்தித்திருக்கலாம். அதை எல்லாம் விட்டுவிட்டு மகனை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரைச் சந்தித்தது ஏன் என்பது தான் மர்ம முடிச்சாக இருக்கிறது. எங்கேயோ இது நெருடலை ஏற்படுத்துகிறது. 

பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்து பேட்டி அளித்த மருத்துவர் அய்யா, நாங்குநேரி அதிக தூரம் என்பதால், நான் அங்கு தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை என்கிறார். ஆனால், யாரிடமும் மூச்சு விடாமல், ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து டெல்லி சென்றுள்ளார். 

இவை எல்லாம் எங்கேயோ இடிக்கவில்லையா? இந்தச் சந்திப்பு குறித்து டெல்லி வட்டாரங்கள் பல யூகங்களைத் தெரிவிக்கிறது. அய்யா, மகன் சகிதம் டெல்லி வந்து பிரதமரைச் சந்தித்தே, மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டுதான் என்றும், தமிழ்நாட்டுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும். அதை வைத்துதான் பாஜகவுக்கு வலிவு தேட முடியும். வன்னியர் இனத்துக்கு அந்தப் பிரிதிநிதித்துவம் தந்தால் தான் வன்னியர்களை பாஜக பக்கம் ஈர்க்க முடியும். அன்பு மணிக்கு அதைக் கொடுங்கள் என்றும், பிரதமரிடம் யாசிக்க வந்ததாக டெல்லி வட்டார செய்திகள் கூறுகின்றன. 

யூகங்கள்தானே என இதை உதறித் தள்ளிவிட்ட முடியாது. மருத்துவர் அய்யா, மகன் பதவிக்காக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, போன்ற கட்சிகளிடம் மன்றாடிய பழைய வரலாறுகளை அறிந்தவர்களால் இந்த யூகத்தில் உண்மை இருக்காது என ஒதுக்கி விட முடியாது.

அய்யா மொழியிலேயே சொல்வதென்றால், ஆதாயமின்றி அந்த அரசியல் வியாபாரி எந்த அரசியல் வியாபாரமும் நடத்தியதில்லை. பொய்ச் சரக்குகளை அப்பாவி மக்களிடம் ஏமாற்றி வியாபாரம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. கெட்டிக்காரன் புளுக எட்டு நாள் என்பது பழமொழி. அய்யாவின் புளுகு இன்னும் எத்தனை நாள் தாக்குபிடிக்கும் என்று பார்த்துவிடுவோம் என முரசொலி விமர்சனத்தை முன்வைத்துள்ளது.