“உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டை ஆதரித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா” என்று பாமக எழுப்பிய கேள்வியால் திமுகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது.

“உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை பாமக எதிர்க்கவில்லை; எந்தப் பிரச்சினையானாலும் முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடும் பாமக நிறுவனர் , 10 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. பாமக- பாஜக கூட்டணிக்கான அச்சாரமா இந்த சமிக்ஞை?” என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நேற்று பெட்டிச் செய்தி வெளியாகியிருந்தது. ஆரம்பம் காலம் முதலே முரசொலியில் வெளியாகும் கருத்துகள் அனைத்தும் திமுக தலைமையின் கருத்தாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

 

பாமக பற்றிய இந்த விமர்சனமும் திமுக தலைமையின் கருத்தாகக் கருதி பாமக தலைவர் ஜி.கே. மணியும் பதில் அறிக்கை ஒன்றை நேற்றே வெளியிட்டார். இதில் 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி வெளிப்படுத்தியிருந்தார் ஜி.கே.மணி. அறிக்கையின் இறுதியில், “பாஜகவுடன் கூட்டணி என்று பாமக ஒருபோதும் கூறவில்லை” என்று தெரிவித்த ஜி.கே.மணி, “உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வாக்களித்தன. 

சமூகநீதிக்கு எதிராக இந்தக் கட்சிகளுடன் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் முடிவை திமுக கைவிடுமா?” என்பதை திமுக தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஜி.கே. மணி தெரிவித்திருந்தார். பாமகவின் இந்த அறிக்கையால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. உயர் சாதியினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவை அன்புமணி மக்களவையில் எதிர்க்கவில்லை என்ற கருத்தை வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்தான் தெரிவித்தார். அதன்பிறகே முரசொலியில் இது பற்றி கருத்து வெளியானது. 

ஆனால், தங்கள் கூட்டணி கட்சிகளே இடஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்ததை திமுக எப்படி மறந்தது என்ற கேள்வியை பொதுவெளியில் ஏற்படுத்தியது. தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் இதுபோன்ற செய்திகளை முரசொலி தவிர்த்திர்க்கலாம் என்று திமுக தரப்பிலேயே குரல் எழுந்துள்ளது. அண்மையில் ரஜினியைப் பற்றி முரசொலியில் விமர்சனம் எழுந்ததும், அதற்கு அடுத்த நாளே முரசொலியில் வருத்தம் வெளியிடப்பட்டது. இதை திமுக தொண்டர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி நலமாக இருந்தவரை முரசொலியில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கே தெரிந்தே வெளியாகும். அதுபோன்ற நிலை இப்போது இல்லை என்பதால், தேவையில்லாத கருத்துகள் முரசொலியில் வெளியாகிவிடுவதாக திமுக தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.