அரசியல் செய்ய ஆளுநர் மாளிகை எதற்கு! சைதாப்பேட்டையில் வீடு பாருங்கள்! ஆளுநர் ரவி மீது முரசொலி கடும் தாக்கு.!

சாவர்க்கர் என வைப்பது இல்லை என்பது உங்களது கோபமாக இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக ஒரு ஆளுநர், உரையாற்றாமல் போயிருக்கிறார்.

Murasoli Criticizes Tamilnadu Governor RN Ravi tvk

மனதுக்குள் மன்னரைப்போல நினைத்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில்: தேசிய கீதம் இசைத்து மரியாதையாக அவைக்குள் அழைத்து வருகிறார்கள் ஆளுநரை. ஆனால் அவர் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகிறார். கடந்த முறையும் அதைத்தான் செய்தார். இந்த ஆண்டும் அதையே தான் செய்கிறார். ஆளுநர் திருந்தவே மாட்டார் போலும். 

Murasoli Criticizes Tamilnadu Governor RN Ravi tvk

ஆண்டுக்கு ஒரு முறை எழுதிக் கொடுப்பதை வாசிப்பதும் இல்லை. சபை நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் இல்லை. அரசின் கோப்புகளில் கையெழுத்து போடுவதும் இல்லை. ஆளுநர்களுக்கு இருக்கும் மொத்த வேலைகளே இந்த மூன்றுதான். அந்த மூன்றையும் செய்யாமல் சனாதன ஆராய்ச்சி செய்கிறார். திருக்குறள் பொழிப்புரைகளை பிரித்தெடுக்கிறார். குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த நபருக்கு ஆதரவாக சேலத்துக்குச் சென்று ஆராய்கிறார். பொது மேடைகளில் அதற்கு தொடர்பு இல்லாத, அரசு விவகாரங்களைப் பேசுகிறார். மாணவர்களை கூட்டி வைத்துக் கொண்டு கோப்புகளுக்கு விளக்கம் சொல்கிறார். உண்மையில் அவரைப் புரிந்து கொள்வது கூட சிரமமாகத் தான் இருக்கிறது. அவரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்கிறார். இதில் உள்ளது தனக்கு உடன்பாடு இல்லாதது என்கிறார். உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல் தர வேண்டும்?

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட் : சட்ட சபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்.! எந்த வரிசையில் இடம்.? யாருக்கு பக்கத்தில் தெரியுமா.?

Murasoli Criticizes Tamilnadu Governor RN Ravi tvk

உடன்பாடு இல்லாத உரையை வாசிக்க மறுக்க எதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்ப வேண்டும்? அதை ஆளுநர் மாளிகையில் இருந்தே சொல்லி அனுப்பி இருக்கலாமே? ஏன் அவர் நேரத்தை அவரே விரயம் செய்து கொண்டார்? அந்த ஒரு மணி நேரத்தை சனாதன ஆராய்ச்சி செய்வதில் கழித்திருக்கலாமே? தான் ஒப்புதல் வழங்கிய உரையில், தவறு நிறைய இருக்கிறது என்று, அவரே சொல்கிறார். என்ன தவறு என்பதைச் சொன்னாரா? இல்லை. தவறைக் கண்டுபிடித்திருந்தால்தானே சொல்வார்?

தேசியகீதம் பாடவில்லை என்று தனது பழைய தேய்ந்து போன ரெக்கார்டையே பாடினார் ஆளுநர். தேசிய கீதம் இறுதியில்தான் பாடுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்குவதும் - தேசிய கீதத்தில் முடிப்பதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வழக்கம். அதையே மாற்றச் சொல்கிறார். தேசிய கீதம் பாடினால், திராவிட உத்கல வங்கா என்று வரும் போது அவர் காதை மூடிக் கொள்வாரா? தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என ஒலிக்கும் போது காதை மூடிக் கொண்டாரா? அவரால் மனதுக்குள் ஏதோ மன்னரைப் போல நினைத்துக் கொண்டு நடந்து கொள்கிறார். அவருக்கு தமிழ்நாடு பிடிக்காது என்றால், தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. அவருக்கு ஜி.யு.போப் பிடிக்கவில்லை. அதற்காக போப் சமாதியைத் தோண்ட வேண்டுமா? காந்தி பிடிக்கவில்லை என்பதற்காக இன்னொரு முறை சுடப்பட வேண்டுமா?

நேதாஜியை நேற்றுதான் படிக்கிறார். அம்பேத்கரை அதற்கு முந்தைய நாள்தான் படிக்கிறார். தமிழ்நாட்டை இப்போது தான் அறிகிறார். அவருக்கு எல்லாமே புதுசா இருக்கிறது. உடனே, ஏன் இவர்களை மறைத்தீர்கள்? என்கிறார். தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஜாதி பார்த்து கொண்டாடுகிறார்களாம் - இவர் குற்றம் சாட்டினார். காந்தி, திலகர், நேதாஜி போஸ், பகத்சிங், நேரு என மாநிலம் கடந்து பேர் வைத்தவர்கள் நாம். ஜாதியைக் கடந்து, மாநிலம் கடந்த தேச பக்தர்கள் நாம். சாவர்க்கர் என வைப்பது இல்லை என்பது உங்களது கோபமாக இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக ஒரு ஆளுநர், உரையாற்றாமல் போயிருக்கிறார். இது எந்த வகையில் சரியானது? அவைக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசினால் அவை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். முதன்முதலாக ஆளுநர் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமையல்ல, இழுக்கு ஆகும்.

இதையும் படிங்க:  நிதி நிலை சரியில்லை! அரசு ஊழியர்கள் போராட்டத்தை கை விட்டுட்டு! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நிதி அமைச்சர்.!

திரும்பத் திரும்ப ஒரே தவறை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவர் தனது பதவியில் இருந்து விலகி- கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறி – சைதாப்பேட்டையில் தனியாக வீடு எடுத்துத் தங்கி அரசியல் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு இத்தகைய அருவருப்பான செய்கைகளைச் செய்யக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில ஆளுநர்கள் என்பவர்கள் நியமனங்களே, மாநில அரசுகளின் சிந்தனையை வெளிப்படுத்தும் ஸ்டெனோகிராபர்களே ஆளுநர்கள் என்று எத்தனையோ முறை உச்சநீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டி இருக்கிறது. அதன்பிறகும் திருந்தாமல் இருந்தால் என்ன செய்வது? யாரை நொந்து கொள்வது?

தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்று சொல்லி விட்டு, தேசிய கீதம் முடிவில் பாடும் போது எழுந்து சென்றதை விட தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் செயல் இருக்க முடியுமா? இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை? தேசபக்தத் திலகங்கள் தான் சொல்ல வேண்டும். இப்படி தேசிய கீதம் பாடப்படும் போது தி.மு.க. அமைச்சர் ஒருவர் எழுந்து போயிருந்தால் தேசியப் பத்திரிக்கைகள் என்ன குதி, குதிக்கும்?

Murasoli Criticizes Tamilnadu Governor RN Ravi tvk

ஆளுநராக இருப்பவர் எதையும் பேசலாம், எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று விட்டு விடுகிறார்களா? அப்படி விட முடியுமா? ஆளுநரின் செயல் என்பது தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் செயலாகும். தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் செயலாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தையும், சபை மாண்புகளையும் மதிக்காத தன்மை ஆகும். மக்களாட்சியைப் பற்றி துளியும் கவலைப்படாத செய்கை ஆகும். தான் வகிக்கும் பதவி இன்னது என்று உணராமல், தன்னிஷ்டத்துக்கு சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் காரியம் ஆகும். இதற்கு ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும். அவரை ஏவிவிடும், ஒன்றிய பா.ஜ.க. தலைமை நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் என கூறியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios