தர்ம யுத்தத்திற்கு காரணமே சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவது தான் எனவும், அணிகள் இணைப்புக்கு நான் காரணமில்லை எனவும் ஒபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வரும் நிலையில் திடீரென இணைப்பு தள்ளிப்போயுள்ளது. இதற்கு காரணம் ஒபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தான் எனவும், பதவிகள் கேட்கப்பட்டதாலேயே அணிகள் இணைப்பில் இழுப்பறி நிலவுவதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், கே.பி.முனுசாமியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், தர்ம யுத்தத்திற்கு காரணமே சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவது தான் எனவும், அணிகள் இணைப்புக்கு நான் காரணமில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், கட்சியின் நலன் கருதியும் தொண்டர்கள் நலன் கருதியும் சில கருத்துக்களை முன் வைக்கப்படுவது வழக்கம் தான் எனவும், பன்னீர் செல்வம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் முழுமையாக கட்டுப்படுவோம் எனவும் குறிப்பிட்டார். 

கோரிக்கையின் கரு முழுமையாக நிறைவேற்றப்படவில்லையெனில் இணைப்பு சாத்தியமில்லை எனவும் முனுசாமி தெரிவித்தார்.