ஆர்கிடெக்ட் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார்  கைது செய்துள்ளனர். 

அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதில், தனது மரணத்துக்குக் காரணம் என ரிபப்ளிக் டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டுள்ளார். எனவே ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இதனையொட்டி மும்பை போலிசார் அவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

 

முன்னதாக பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அர்னாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்னாப் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றியதாக கூறப்படுகிறது. போலீசார் தன்னைத் தாக்கியதாக அர்னாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போலீசார் அது உண்மை இல்லையென மறுத்துள்ளனர். தற்போது இந்த செய்தி வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி' ஒளிபரப்பியது.