கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த பத்து மணி நேரத்தில் பெய்த தொடர் கனமழையால் ஒட்டுமொத்த மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளும் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மும்பையே இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், எப்போது இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை கொரோனாவுடன் சேர்த்து, மழையையும் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்னும் கூட நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மும்பை மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 

சாலைகள், ரயில் தண்டவாளங்கள், அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டிடங்கள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்று காலை தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மும்பை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு படை வீரர்கள், மருத்துவர்கள், என்டிஆர்ஆப் வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மணிநேரத்தில் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது, இதில் மும்பை மாநகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது அவசரகால சேவைகள் தவிர நகரத்தின் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிக மழை பெய்ய கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பை போலவே மகாராஷ்டிராவின் தானே, புனே ராய்காட், ரத்தனகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலில் 4 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொது மக்களும் கடற்கரை அல்லது தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையில் சுமார் 230. 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதேபோல் மகாராஷ்ட்ரா கடற்கரையில் 4,5,6 ஆகிய தேதிகளில் காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் முறையே  84.77மில்லி மீட்டர் மற்றும்  79.27 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த சில மணி நேர மழையில் கோரோ கான், கிங் சர்கில், ஹிந்த் மாதா , தாதர், சிவாஜி சாக், ஷெல் காலனி, குர்லா எஸ்டி டிப்போ, பந்த்ரா டாக்கீஸ், மற்றும் சியோன் சாலை 24,  ஆகிய இடங்களில் தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக மும்மை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முற்றுலுமாக முடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.